வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (26/12/2018)

கடைசி தொடர்பு:11:40 (27/12/2018)

``தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கக்கூடத் தயார்’’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

விருதுநகர் அருகே 8 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றிய விவகாரம் தொடர்பாக சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்கள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஒருவரின் 23 வயது மனைவிக்கு ஏற்கெனவே 3 வயது பெண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார். தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ள அவர், சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அப்போது அவருக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அவரின் உறவினர்கள் அலுவலக வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.

சாத்தூர் கர்ப்பிணி பெண்

பெண்ணின் கணவர் கூறும்போது, என் மனைவிக்கு ஹெச்.ஐ.வி பாதித்த நபரின் ரத்தம் தவறாக ஏற்றப்பட்டதால் என் வாழ்க்கையே அழிந்துவிட்டது. அரசு மருத்துவமனை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனைவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாகத் தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, ``இந்தச் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கக்கூடியது. இந்தச் சம்பவத்தை நியாயப்படுத்த முடியாது. விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சட்டரீதியாக வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரி 30-ம் தேதி குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பரவாமல் தடுக்க அனைத்து மருந்துகளும் உண்டு. குழந்தைக்கு வராமல் 99 சதவிகிதம் தடுக்க முடியும். உயர்தர சிகிச்சை வழங்கப்படும். அவரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படும். ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கே திருப்திகரமாக இல்லாவிட்டால் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும். சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகளில் முழுமையாக ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தால் அனைத்து ரத்தமும் பாதுகாப்பற்றது என எண்ண வேண்டாம்" எனத் தெரிவித்தார்.