வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (26/12/2018)

கடைசி தொடர்பு:18:40 (26/12/2018)

கடலூர் அருகே மணல் குவாரியை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திரிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றில் அரசு மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த மணல் குவாரியில் அரசு விதி முறைகளை மீறி மணல் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. மேலும், ஆளும் கட்சியினர் துணையுடன் குவாரியில் பல்வேறு முறைகேடுகள் நடைப்பெறுவதாகக் கூறி குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை, கறுப்புக்கொடி எனப் பல்வேறு போராட்டங்களை, கடந்த இரண்டு நாள்களாக ஈடுப்பட்டு வருகின்றனர்.

அரசு மணல் குவாரி

இந்நிலையில், இன்று தி.மு.க தலைமையில் காங்கிரஸ், தே.மு.தி.க, கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அனைத்து கட்சியினர் அரசு மணல் குவாரியை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த பண்ருட்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால், போராட்டம் தொடர்ந்து நடந்து வந்தது. இதையடுத்து கடலூர் சப்-கலெக்டர் நேரில் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மணல் குவாரியைத் தற்காலிகமாக மூடுவதாக உறுதியளித்தார். அதன் பின்னர், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் மீண்டும் மணல் குவாரி இயங்கினால் மணல் குவாரியில் குடியேறும் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்து கலைந்து சென்றனர்.