`பெண்களை இழிவுபடுத்திப் பேசிய விவகாரம்!’ - புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் கைது | man arrest by police who released video against women

வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (26/12/2018)

கடைசி தொடர்பு:19:10 (26/12/2018)

`பெண்களை இழிவுபடுத்திப் பேசிய விவகாரம்!’ - புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் கைது

காட்பாடி அருகே மாற்று சமுதாயப் பெண்களைத் தகாத வார்த்தைகளால் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட புரட்சி பாரதம் கட்சி பிரமுகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 புரட்சி பாரதம் கட்சி பிரமுகர்

தமிழகத்தில் சாதி மோதல்களைத் தூண்டும் வகையில் சமீபகாலமாகச் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. பட்டியல் இனத்தவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள் மாறி மாறி ஆபாசமாகப் பேசி ‘டிக்-டாக், ஃபேஸ்புக், வாட்ஸ்-அப்’ போன்ற சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவேற்றுகின்றனர். இதனால் ஏற்படும் பின் விளைவுகளை அவர்கள் கொஞ்சமும் யூகித்துப் பார்ப்பதில்லை. அண்மையில் இளைஞர்கள் சிலர் பெண்களை இழிவுபடுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதுதொடர்பாகப் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசிய திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

 புரட்சி பாரதம் கட்சி பிரமுகர்

இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், பெண்களைக் கொச்சைப்படுத்தி பேசும் அதே போன்றதொரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அந்த வீடியோவில் பெண்களை இழிவாகப் பேசியிருந்தவர், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் கே.வி.குப்பம் ஒன்றிய செயலாளர் கோபி (30). இவர், காட்பாடி அடுத்த லத்தேரி அண்ணங்குடி கட்டேரி அம்மன் கோயில் தெருவில் வசிக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக கோபி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பா.ம.க-வினர், லத்தேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையறிந்த கோபி தலைமறைவாகிவிட்டார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று காலை கோபி பிடிபட்டார். அவரைக் கைது செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதனிடையே, புரட்சி பாரம் கட்சியின் ஒன்றியச் செயலாளர் பொறுப்பில் இருந்து கோபி நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.