வெளியிடப்பட்ட நேரம்: 21:10 (26/12/2018)

கடைசி தொடர்பு:21:10 (26/12/2018)

`சேலத்தில் உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு எதிர்ப்பு' - நூதன போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

உயர் அழுத்த மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டம் சேஷன்சாவடி பகுதியில் விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம், கண்களில் கறுப்புத் துணி கட்டிக்கொண்டு போராட்டம், சவக்குழிக்கு மண் தள்ளும், போராட்டம், வைக்கோல் போராட்டம், சங்கு ஊதும் போராட்டம், இலைதழையை கட்டிக்கொண்டு போராட்டம் எனக் கடந்த பத்து நாள்களாக ஒவ்வொரு நாளும் விநோதமான போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

போராட்டம்

அந்த வகையில் இன்று விவசாயிகள் தங்கள் கால்நடைகளைக் கூட்டி வந்து மனிதர்களும், மாடுகளும் பச்சைத் தீவனம் தின்னும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்கு 10-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தொடர் உண்ணாநிலை போராட்டமும் மேற்கொண்டிருப்பதாலும்,  இவர்களின் போராட்டங்களுக்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவு அளித்து வருவதாலும், முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில் ஆளுங்கட்சி பலவீனம் அடைந்து வருகிறது.  இதுபற்றி தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டச் செயலாளரும், இப்போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளருமான ராமமூர்த்தி, ``இந்த உயர் அழுத்த மின் கோபுரங்களை வீட்டின் மீதும் விவசாய நிலத்தின் மீதும் போவதற்கு அனுமதிக்க முடியாது. உயர் அழுத்த மின் கோபுரங்கள் செல்லும் டவருக்கு கீழே குடியிருந்தால் பெண்கள் கர்ப்பம் தரிக்க மாட்டார்கள். மாடுகள் சினை ஆகாது.

குழந்தைகள் நோய்வாய்ப்படும், காடுகளில் விளைச்சல் இருக்காது. ஆழ்துளைக் கிணறு போட முடியாது. காடுகளுக்குத் தண்ணீர் பாய்ச்சவும் முடியாது. தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட ஸ்கீம் மூலம் உயர் அழுத்த மின் கோபுரங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லுவதால், தமிழகம் மின் பந்தல் மாநிலமாக மாறி அழிந்து விடும். கேரளாவில் கொண்டு செல்வதைப்போல சாலைகளின் ஓரத்தில் குழிகள் தோண்டி கேபிள் லைனாக கொண்டு செல்ல வேண்டும். ஏற்கெனவே திருவாலாம் டு திருப்பூர் வரை விவசாயிகளை மிரட்டிக் கொண்டு சென்றுள்ள பாதையில் உள்ள விவசாயிகளுக்கு மாதந்தோறும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்'' என்றார்.