`மோடி சொன்ன 4 கோடி வேலைவாய்ப்பு எங்கே?' - கேள்வியெழுப்பும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் | Democratic Youth Federation of India questioned Modi Promises

வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (26/12/2018)

கடைசி தொடர்பு:21:40 (26/12/2018)

`மோடி சொன்ன 4 கோடி வேலைவாய்ப்பு எங்கே?' - கேள்வியெழுப்பும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்

ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு எனத் தேர்தல் வாக்குறுதி கொடுத்த மோடி ஆட்சியில் கடந்த நான்கரை ஆண்டுகளில் இரண்டரை லட்சம் பேருக்குதான் வேலை கொடுத்துள்ளனர் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

வேலைவாய்ப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பாலா செய்தியாளர்களிடம் பேசும்போது, ``இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு சிவகங்கையில் டிசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளது. பாகுபடற்ற கல்வி, பாதுகாப்பான வேலை என்கிற கொள்கையை முழக்கமிட்டு 25,000 இளைஞர்கள் பங்கேற்கிற பேரணி பொதுக்கூட்டத்தோடு மாநாடு தொடங்குகிறது.

கடந்த நாடளுமன்றத் தேர்தலின்போது மோடி கொடுத்த வாக்குறுதி வருடத்துக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைதருவோம் என்பதாகும். ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் இரண்டரை லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கொடுத்திருக்கிறார் மோடி. தமிழகத்தில் எடப்பாடி அரசு வேலைவாய்ப்பை பூர்த்தி செய்யாமல் அவுட் சோர்சிங் முறையில் நியமனம் செய்கிறார்கள். சிவகங்கை மாவட்டத்தில் கிராபைட் கனிமத்தைப் பயன்படுத்தி பெரும் தொழிலாக உருவாக்க வேண்டும். ராஜீவ்காந்தி அடிக்கல் நாட்டும்போது ஒர் அறிவிப்பு செய்தார். அதாவது 1,000 கோடித் திட்டத்தில் 50,000 பேருக்கு வேலை கொடுக்கப்படும் என்கிற திட்டத்தை ராஜீவ்காந்தி அறிவித்தார். அந்த அறிவிப்பை செயல்படுத்த வாலிபர் சங்கம் கோரியுள்ளோம்.
 

சிவகங்கை மாவட்டம் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் தைலமரத்தைத் தடைசெய்திட வேண்டும். கோவிலூர் கெமிக்கல் ஆலையை மூட வேண்டும் .சுற்றுபுறச்சூழல் நலனுக்குத் தடையாக இருக்கிற அனைத்தையும் தடுத்து நிறுத்த வாலிபர் சங்கத்தின் மாநில மாநாட்டை திட்டமிட உள்ளோம். வைகை ஆற்றில் சிவகங்கை மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் 72 குடிநீர் திட்டங்களின் மூலம் ஒரு நாளைக்கு ஒருகோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. சகல பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக உள்ள வைகையில் மணல் கொள்ளை நடப்பதை தடுப்பதற்கு வாலிபர் சங்கப் போராட்டம் நடத்துகிற வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு நடைபெற உள்ளது. இது போன்ற போராட்டங்களில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் முன் நிற்கும்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க