வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (26/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (26/12/2018)

‘பிளாஸ்டிக் பேரழிவு; சுற்றுலா பயணிகளுக்கு விழிப்பு உணர்வு’- அரசு பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டுகள்

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் பிளாஸ்டிக் குப்பைகள் பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கிய அரசுப் பள்ளி மாணவர்கள் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார்கள்.

பள்ளி மாணவர்கள்

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தேவதானப்பட்டி வனச்சரகம் மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து ’நாட்டு நலப்பணி முகாம்’ என்ற செயல்திட்டத்தை உருவாக்கினர். அதன் அடிப்படையில் கொடைக்கானல் மலைச்சாலையில் உள்ள டம்டம் பாறை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றினர். அதைத் தொடர்ந்து கொடைக்கானல் மலைப்பகுதியை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், பிளாஸ்டிக் குப்பைகளால் ஏற்படும் பேரழிவுகள் குறித்தும் விளக்கும் துண்டுப் பிரசுரங்களைக் கொடைக்கானல் சென்ற சுற்றுலாப் பயணிகளிடம் வழங்கி, விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்பு உணர்வு

இந்த நிகழ்ச்சியில் தேவதானப்பட்டி வனச்சரக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தேவதானப்பட்டி பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர். பள்ளி விடுமுறை விடப்பட்டுள்ள சூழலில் இயற்கையைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் இம்முயற்சி வெகுவாகப் பாராட்டைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.