``பசு மாடுகள்தான் என் இலக்கு!’’ - தேனியில் பிடிப்பட்ட கொள்ளையன் வாக்குமூலம் | Police Arrested Cow Thief in theni

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (27/12/2018)

``பசு மாடுகள்தான் என் இலக்கு!’’ - தேனியில் பிடிப்பட்ட கொள்ளையன் வாக்குமூலம்

கோம்பை பகுதியில் சமீப காலமாக தோட்டங்களில் கட்டப்பட்டிருக்கும் பசு மாடுகள் மட்டும் குறிவைத்து திருடும் சம்பவம் அதிகரித்துவந்தது. யார் இச்செயலில் ஈடுபடுகிறார்கள் என விவசாயிகள் குழம்பிவந்த நிலையில், இன்று மாட்டுக் கொள்ளையனை போலீஸார் கைது செய்தனர்.

கொள்ளையன்

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள கோம்பைப் பகுதியில் 5-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் சமீப காலமாக காணாமல் போயுள்ளன. தோட்டங்களில் கட்டப்பட்டுள்ள பசு மாடுகளை மட்டும் குறிவைக்கும் கொள்ளையனைப் பிடிக்க வலியுறுத்தி விவசாயிகள் காவல்துறைக்கு கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில், போலீஸார் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்துக்கு இடமான அப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒருவரைப் பிடித்து விசாரித்துள்ளனர். முன்னுக்குப் பின் முரணாக அவரிடம் இருந்து பதில் வரவே, சந்தேகமடைந்த போலீஸார் அவரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது, கோம்பை கக்கன் தெருவில் வசிக்கும் ரங்கராஜன் என்பதும், தோட்டங்களில் இரவில் பசுமாடுகளை திருடியதும் தெரியவந்தது.

காவல்நிலையம்

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ``இரவில்தான் மாடுகளை திருடப் போவேன். பசு மாடுகள் மட்டுமே என் இலக்கு. திருடிய மாடுகளை இரவோடு இரவாக வெளி ஊர்களுக்குக் கொண்டு சென்று விற்றுவிடுவேன்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இவர் மீது வேறு ஏதேனும் திருட்டு வழக்கு பதியப்பட்டுள்ளதா, வேறு திருட்டுச் சம்பவத்தில் இவர் தொடர்புடையவரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். ரங்கராஜன் விற்பனை செய்த திருட்டு மாடுகளை யார் வாங்கியது என்றும், அவர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நீண்ட நாள்களாக சுற்றித்திருந்த மாட்டுத் திருடன் பிடிபட்டுள்ளதால் நிம்மதியடைந்துள்ளனர் கோம்பை மக்கள்.