வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:04:00 (27/12/2018)

`சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும்’ - காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை ஐயப்ப ஜோதி நிகழ்ச்சி

பரிமலையின் புனிதம் காக்க வேண்டும் என வலியுறுத்தி காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்ப ஜோதி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஐயப்ப ஜோதி

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்தப் போராட்டத்தை ஐயப்ப தர்ம சேனா என்ற அமைப்பை மையமாகக் கொண்டு பா.ஜ.க. மற்றும் சங்க்பரிவார் அமைப்புகள் முன்னெடுத்து வருகின்றன. கேரளத்தில் நடத்தும் போராட்டங்களை தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் விரிவுபடுத்தும் பணியில் சங்க் பரிவார் அமைப்புகள் இறங்கியுள்ளன.

ஐயப்ப ஜோதி

கேரளத்தில் ரத யாத்திரை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தியது போன்று தமிழகத்திலும் ஆர்ப்பாட்டம், மறியல் எனப் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தின் ஒரு பகுதியாக சபரிமலையின் புனிதம் காக்க வேண்டும் என வலியுறுத்தி ஐயப்ப தர்ம சேனா சார்பில் காசர்கோடு முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்ப ஜோதி சரண கோஷம் என்ற நிகழ்ச்சி இன்று மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை நடந்தது.

ஐயப்ப ஜோதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை முதல் கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என குடும்பத்தினருடன் கையில் தீபம் ஏந்தி நின்று சரண கோஷம் எழுப்பினர். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஐயப்ப ஜோதி நிகழ்ச்சி நடந்தது.