வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (27/12/2018)

கடைசி தொடர்பு:12:53 (27/12/2018)

மதுரை ஆவின் சேர்மனாக ஓ.ராஜா பொறுப்பேற்பு!- புறக்கணித்த அமைச்சர்கள்

ஆவின் சேர்மனாக ஓ.ராஜா பொறுப்பேற்ற நிகழ்ச்சியை மதுரை மாவட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், கட்சி நிர்வாகிகள் புறக்கணித்தனர். ஓ.ராஜாவை கட்சியில் மீண்டும் இணைத்த தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவர்கள் புறக்கணித்திருப்பதாகக் கட்சியினர் கூறுகிறார்கள்.

பதவியேற்றுக்கொண்ட ஓ.ராஜா

மதுரை-தேனி மாவட்ட பால் கூட்டுறவு சங்கத் தேர்தலில், ஓ.பி.எஸ்ஸுக்கு நெருக்கமான செல்லமுத்துவுக்கு எதிராக சேர்மன் பதவியைக் கைப்பற்றிய ஓ.ராஜாவை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக, கடந்த 19-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டாக அறிக்கை விட்டனர். அந்த அதிரடி நடவடிக்கை அ.தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியது. `தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அ.தி.மு.க-வில் இடமில்லை'' என்று பெருமையாகப் பேசினார்கள் அமைச்சர்கள். இதை, மதுரை-தேனி மாவட்ட கட்சியினரும் வரவேற்றார்கள். இந்த நிலையில், கடந்த 24-ம் தேதி ஓ.ராஜா கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது, கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மதுரை ஆவின் சேர்மனாக பதவியேற்ற ராஜா

இந்த நிலையில் ஓ.ராஜா, இன்று ஆவின் தலைவராக முறையாக பதவியேற்கப்போவதாக அறிவித்திருந்தார். இதற்காக, அமைச்சர்கள் புடைசூழ கட்சியினர் திரண்டு வருவார்கள் என்று எதிர்பார்த்தார் ஓ.ராஜா. ஆனால், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருசிலரைத் தவிர, முக்கிய நிர்வாகிகள் யாரும் வரவில்லை.  ஆர்.பி.உதயகுமார், செல்லூர் கே.ராஜூ, ராஜன்செல்லப்பாவின் ஆதரவாளர்கள் முற்றிலுமாகப் புறக்கணித்தனர். சேர்மன் பதவிக்குப்  போட்டியிட்ட  செல்லமுத்து, சோகமாக உடனிருந்தார்.

ராஜாவுக்கு சால்வை அணிவிக்கும் ராஜன் செல்லப்பா

கட்சியிலிருந்து  நீக்கப்பட்டது, பின்பு சேர்த்தது, மதுரை மாவட்ட கட்சி நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியைப் புறக்கணித்தது பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்குப் பதில் சொல்லாமல், எல்லோருக்கும் புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு அலுவலகத்துக்குள் சென்றுவிட்டார் ஓ.ராஜா. மிகத் தாமதமாக மதுரை புறநகர் மா.செ. ராஜன் செல்லப்பா வருகைதந்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க