பொன்.மாணிக்கவேல் பொய் வழக்குகளைப் போடுகிறார் - டி.ஜி.பியிடம் அறநிலையத் துறை அதிகாரிகள் புகார்! | Complain against pon manikavel

வெளியிடப்பட்ட நேரம்: 14:05 (27/12/2018)

கடைசி தொடர்பு:14:12 (27/12/2018)

பொன்.மாணிக்கவேல் பொய் வழக்குகளைப் போடுகிறார் - டி.ஜி.பியிடம் அறநிலையத் துறை அதிகாரிகள் புகார்!

சிலைகடத்தல் தொடர்பாக அற நிலையத்துறை அதிகாரிகள் மீது பொன்.மாணிக்கவேல்  பொய் வழக்குகள் போடப்படுவதாகவும்  சிலைகடத்தல்  வழக்குகளையும் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போன்ற தனிவிசாரணை அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என அற நிலையத்துறை அதிகாரிகள் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர்.

பொன்.மாணிக்கவேல்

சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாகப் பணியாற்றிவந்த பொன்.மாணிக்கவேல் கடந்த நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெற்றார். சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றுவது குறித்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை உயர் நீதிமன்றம்.இந்த நிலையில் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக ஏ.டி.எஸ்.பி இளங்கோ, டி.எஸ்.பி பழனிச்செல்வன், இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரனிடம் புகார் மனு கொடுத்தனர். இவர்களைத் தொடர்ந்து இன்று ஏ.டி.எஸ்.பி குமார், டி.எஸ்.பி சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் 12 சப்-இன்ஸ்பெக்டர்கள் டி.ஜி.பி-யைச் சந்தித்தனர்.

புகார்

 

அவர்களும் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவில் நடந்த உள்விவகாரங்கள் குறித்து மனு கொடுத்தனர். தன் மீதான புகாருக்கு விளக்கமளித்த பொன்.மாணிக்கவேல், `என் மீது புகார் அளித்தவர்களை நினைத்தால் பரிதாபம்தான் வருகிறது. இந்த 21 பேர் யார் என்று கூட தெரியாது’ என்றார். இந்நிலையில் அவர் மீது  தமிழ்நாடு அற நிலையத்துறை அரசிதழ் பதிவுபெற்ற அலுவலர்கள்  சங்கத்தினர் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் தலைவரும் இணை ஆணையருமான தென்னரசு,``சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரின் விசாரணையில் உண்மைத்தன்மை இல்லை.

இதுவரை  பதிவு செய்யப்பட்ட எல்லா வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை. சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கூறிய அவர் அறநிலையத்துறை அதிகாரிகள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்யப்படுவதாக'' குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர்,  ``60 ஆண்டுகளுக்கு முன்னர் திருடுபோன சிலைகள் குறித்த ஆவணங்கள் அற நிலையத்துறை வசம் இல்லை. சிலைகடத்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மறுவிசாரணை செய்ய சி.பி.சி.ஐ.டி போன்ற தனிவிசாரணை அமைப்பை ஏற்படுத்த டிஜிபியிடம் கோரிக்கைமனு அளித்தேன்'' என கூறினார்.