வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (27/12/2018)

கடைசி தொடர்பு:16:45 (27/12/2018)

`26,000 மின்வாரிய ஊழியர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா!’ அமைச்சர் தங்கமணி

கஜா புயல் மீட்புப் பணிகளில் சிறப்பாகச் செயல்பட்ட 26,000 மின் ஊழியர்களுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாகத் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறினார். 

அமைச்சர் தங்கமணி

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, ``கஜா புயல் பாதித்த பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் சுமார் ஒரு மாத காலம் தங்கியிருந்து பணியாற்றினார்கள். கஜா புயலைக் காட்டிலும் ஊழியர்கள் மிக வேகமாகப் பணியாற்றினார்கள். கஜா புயல் மீட்புப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய 26,000 மின் ஊழியர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்பட இருக்கிறது. பொங்கலுக்குப் பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் அவர்களுக்குப் பாராட்டு விழா நடத்தப்படும். கஜா புயல் மீட்புப் பணிகள் நாடே போற்றும் வகையில் நடைபெற்றது’’ என்றார்.

கஜா புயல் சீரமைப்புப் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள்

கஜா புயல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முழுமையாக மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் அவர்களிடம் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் தங்கமணி, `இன்னும் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மின் இணைப்புக் கொடுக்கப்படாமல் இருக்கிறது. அந்தப் பகுதிகளில் இன்றோ அல்லது நாளையோ மின் இணைப்புக் கொடுக்கப்பட்டுவிடும். விவசாயத்துக்கான மின்சாரம் கொடுக்க இன்னும் 4 அல்லது 5 நாள்கள் ஆகிவிடும். தற்போது 60 சதவிகித அளவுக்கே மின் இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 40 சதவிகிதம் விரைவில் கொடுக்கப்படும்’’ என்றார்.  

உயர்மின் கோபுரம்


விவசாய நிலங்கள் வழியே உயர்மின் கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்த கேள்விக்கு, ``இதுதொடர்பாக நான் விவசாயிகளிடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினேன். கடைசியாக நடத்திய பேச்சுவார்த்தையின் போது ஒருவார காலம் அவகாசம் கேட்டுவிட்டு விவசாயிகள் சென்றார்கள். ஆனால், தற்போது திடீரென போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். நான் ஏற்கெனவே சொன்னதுபோல் இந்த அரசு விவசாயிகளுக்கு எதிராகச் செயல்படாது’’ என்றார்.