`மணல்குவாரி அறிக்கையைத் தெரிவியுங்கள்!'‍ - அரியலூர் கலெக்டரிடம் விவசாயிகள் வாக்குவாதம் | Farmers urges ariyalur collector to release report about sand quarry

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (27/12/2018)

கடைசி தொடர்பு:18:45 (27/12/2018)

`மணல்குவாரி அறிக்கையைத் தெரிவியுங்கள்!'‍ - அரியலூர் கலெக்டரிடம் விவசாயிகள் வாக்குவாதம்

``கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் நியமித்த ஆய்வுக்குழுவின் அறிக்கையை மாவட்ட நிர்வாகம் எங்களிடம் தெரிவிக்க வேண்டும்'' என்று ஆட்சியரிடம் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

                                                          மணல் குவாரி

 

அரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த 36 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து மணல் குவாரி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கிராம மக்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் சார்பில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது. ஆய்வுக் குழுவினர் பொதுமக்கள் முன்னிலையில் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பது குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து ஆய்வுக்குழுவினர் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர் 

                                                           அரியலூர் கலெக்டர் அலுவலகம்

 

இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் கொள்ளிடம் ஆற்றில் மணல்குவாரி அமைத்து மணல் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் விஜயலெட்சுமி தலைமையில் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

மணல்குவாரிக்கு எதிர்ப்பு

இந்தக் கூட்டத்தில் பேசிய விவசாயிகள், மக்களின் எதிர்ப்பை அடுத்து நிறுத்தப்பட்ட மணல் குவாரி தற்போது செயல்படத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு எந்தவிதமான பரிந்துரைகளை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையாக அளித்துள்ளது என்பது எங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் விவசாயிகள், சிதம்பரம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. இதற்குத் தேவையான மண்ணை அருகே உள்ள ஏரிகளில் இருந்து எடுக்க வேண்டும் எனவும் குறிப்பாகக் கண்டிராத்தம் ஏரியையும் தூர் வார வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.