வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (27/12/2018)

கடைசி தொடர்பு:19:44 (27/12/2018)

`பாலபாரதி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்!’ - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்

`மேம்பாலப் பணிகளுக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகையை வழங்க நான் கமிஷன் கேட்பதாக முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி என்மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார். இதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன்’ என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாநகராட்சியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ``திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்தப் பணிகளுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு நான் கமிஷன் கேட்டு தாமதப்படுத்தி வருவதாக, முன்னாள் எம்.எல்.ஏ பாலபாரதி பொய்யான குற்றச்சாட்டுகளை அரசியல் லாபத்துக்காகக் கூறிவருகிறார். இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது.

இந்த மேம்பாலப் பணிகளுக்காக நியாயமான இழப்பீட்டுத் தொகை கொடுக்கும் வகையில் கடந்த ஜனவரி 2018-ம் ஆண்டு அப்போதைய சந்தை மதிப்பில் நகர்ப்புறங்களுக்கு 225 சதவிகிதமும், கிராமப்புற பகுதிகளுக்கு 275 சதவிகிதமும் நில உரிமையாளர்களுக்குப் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம், சென்னை நில நிர்வாக ஆணையத்துக்குப் பரிந்துரை செய்தது. இது வெளிப்படையான ஒன்று. அதன்படி திண்டுக்கல் கோட்டாட்சியர் வங்கி கணக்கில் 31 கோடியே 99 லட்சம் ஒதுக்கீடு செய்து, வங்கியில் வரவு வைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தனது சந்தை வழிகாட்டி மதிப்பில் 33 சதவிகிதம் குறைத்து அறிவித்ததைக் கணக்கில் கொண்டு அதன் காரணமாக சென்னை நில நிர்வாக ஆணையர் மேம்பாலப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகையை நிர்ணயம் செய்து விடுவிக்க மேல் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டு கடிதப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

பாலபாரதி

மாநில அளவிலான கூர்நோக்கு அமைப்பு நிலம் மற்றும் கட்டடத்துக்கான மதிப்பை அங்கீகரித்து அரசாணை பெற்று பின்னர் தான் நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படும். இருப்பினும் பொதுமக்கள் நலன் கருதி நானும் மாவட்ட நிர்வாகமும் நியாயமான இழப்பீட்டுத் தொகையை நில உரிமையாளர்களுக்கு பெற்றுத் தர முயற்சி செய்து வருகிறோம். மாவட்ட அமைச்சர் என்ற முறையில் தமிழக முதல்வரிடம் வலியுறுத்தி வருகிறேன். அரசிடமிருந்து நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான அரசாணை வழங்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது.

இந்த நிலையில், நான் கமிஷன் கேட்டு பொதுமக்களுக்குக் கிடைக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை தாமதப்படுத்துவதாக முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுவது அரசியல் லாபத்துக்காகக் கூறும் அபாண்டமான பொய். பொதுமக்களைத் திசை திருப்புவதற்கான கீழ்த்தரமான குற்றச்சாட்டுகளைச் தனிப்பட்ட முறையில் என் மீது கூறிவருகிறார் பாலபாரதி. இதற்காக அவர், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் சட்டரீதியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்'' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர், ``தாண்டிக்குடி பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையைப் பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் சுற்றித்திரியும் சிறுத்தையைப் பிடிப்பதற்கு வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. திண்டுக்கல் நகருக்கு வரும் பிப்ரவரி மாதம் முதல் நாள்தோறும் குடிநீர் விநியோகம் செய்யப்படும். பத்து கோடி ரூபாய் செலவில் திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள் சீரமைக்கப்படவுள்ளது'' எனத் தெரிவித்தார்.

போராட்டத்தில் பாலபாரதி

பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பல கட்ட போராட்டங்களை நடத்தி வரும் பாலபாரதி, சில நாள்களுக்கு முன்பாக அமைச்சர் சீனிவாசன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு தற்போது அமைச்சர் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக பாலபாரதியிடம் பேசியபோது, "மேம்பால பணிகள் தாமதமாவதற்கு அமைச்சர் சீனிவாசன் தான் காரணம். பணம் வங்கிக்கணக்கிற்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் அனைவருக்கும் பணம் கிடைத்துவிடும் என அமைச்சர் பொதுமக்களிடம் வாக்குறுதி கொடுத்து பல மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்றுவரை பணம் கிடைக்கவில்லை. வங்கியில் பணத்தை வைத்து வட்டிக்கா விடுகிறார்கள். பணத்தை கொடுத்தால் தானே பணிகளை தொடர முடியும். ரயில்வே துறை அவர்களது பணியை முடித்துவிட்ட நிலையில், மாநில அரசு இன்னும் பணியை தொடங்கவே இல்லை. எனவே பணிகள் தாமதம் ஆவதற்கு அமைச்சர் தான் காரணம். மக்கள் பிரச்னைக்காக பல்வேறு வழக்குகளை சந்தித்து இருக்கிறேன். இந்த வழக்கு ஒன்றும் எனக்கு புதிதில்லை. அமைச்சர் வழக்கு தொடுத்தால் சந்திக்க தயார்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க