லாரியைக் கண்டுபிடிக்கச் சென்ற போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்! | Perambalur police files case against unknown robbers over theft of lorry

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (27/12/2018)

லாரியைக் கண்டுபிடிக்கச் சென்ற போலீஸுக்கு அதிர்ச்சி கொடுத்த கொள்ளையர்கள்!

திருட்டுப்போன டிப்பர் லாரியைக் கண்டுபிடிக்கச் சென்ற இடத்தில் கொள்ளையர்கள் கொடுத்த அதிர்ச்சியால் காவல்துறையினர் ஷாக் ஆனார்கள். 

                                              

பெரம்பலூர் மாவட்டம், கவுள்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் டிப்பர் லாரி வைத்து செங்கல், மணல், ஜல்லி ஏற்றி இறக்கும் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு முன்னாள் வி.ஏ.ஒ சுப்பிரமணியன் என்பவருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்கில் தனது டிப்பர் லாரியை நிறுத்தி வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார் செந்தில்குமார். வழக்கம்போல் இன்று காலை வந்து பார்த்தபோது லாரி காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

                                              

ஊர் முழுக்க தேடியவர் பெரம்பலூர் நான்கு ரோட்டில் உள்ள டீக்கடையில் விசாரித்திருக்கிறார். அக்கடைக்காரர் விடியற்காலையில் நான்கு மணியளவில் இப்படி ஒரு லாரி போனதாகச் சொல்லியிருக்கிறார். இதனால் லாரி காணாமல் போனதை உணர்ந்துகொண்ட செந்தில்குமார், பெரம்பலூர் காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்தப் புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

லாரி திருடப்பட்ட இடத்துக்குச் சென்ற காவல்துறையினர், பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் இணைப்பு வயர்கள் அறுக்கப்பட்டுக் கிடந்தது. இதைப் பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். நூதன முறையில் லாரியைத் திருடிச் சென்ற கொள்ளையர்களைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.