வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/12/2018)

கடைசி தொடர்பு:06:00 (28/12/2018)

`குற்றவாளிகள் குடியேற்றத்துக்குத் தடை’ - புதிய தகவல்களுடன் கல்வெட்டு கண்டுபிடிப்பு!

சேலம் மாவட்டம், ஆறகழூர் அருகே வெள்ளிப்பாளையம் கிராமத்தில் உள்ள விளை நிலத்திலிருந்து புதிதாகக் கல்வெட்டு மற்றும் நவகண்ட சிற்பம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

கல்வெட்டு

சேலம் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்களான வீரராகவன், ஆறகழூர் பொன். வெங்கடேசன் ஆகியோர் அடங்கிய குழுவினரால் கண்டறியப்பட்டுள்ள இந்தக் கல்வெட்டில் நாற்பத்தொண்ணாயிரம் எனும் வேளாண்மை மற்றும் வணிகம் செய்த குடிகள், குற்றச் செயல்களைச் செய்தவர்கள் கிராமத்துக்குள் குடியேறத் தடை விதித்தது போன்ற சுவாரஸ்யமான செய்திகள் கிடைத்திருக்கின்றன. ஸ்வஸ்திஸ்ரீ மகாமண்டலேசுவரர் எனத் தொடங்கும் இக் கல்வெட்டானது 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். ஆறகழுரில் இதுவரை தொல்லியல் துறையால் 48 கல்வெட்டுகளும், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தால் 5 கல்வெட்டுகளும் படியெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

பிற கல்வெட்டுகளில் இல்லாத புதிய செய்திகள் இதில் உள்ளது. ஆறகழூரை ‘மலாடாகிய ஜனநாத வளநாட்டு ஆற்றூர் கூற்றத்து ஆறகழூர்’ என்றே எல்லா கல்வெட்டுகளும் குறிப்பிடுகின்றன. ஆனால், தற்போது கண்டறியப்பட்ட கல்வெட்டானது ‘மலாடாகிய ஜனநாத வளநாட்டு மகதை மண்டலத்து நரையூர் கூற்றத்து தென்கரை சீர்மையான ஆறகழூர்’ என்று குறிப்பிடுகிறது. இந்தப் பகுதியில் வாண்டையார்கள் பெயரில் கிடைத்திருக்கும் முதல் கல்வெட்டு இதுதான். இந்த வாண்டையார்கள், நாயக்க மன்னர்களின் கீழ் அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள்.

கல்வெட்டுகள்

குமாரமுத்து கிருஷ்ணப்ப வாண்டையார், ஆறகழூர் திருகாமீசுரமுடைய தம்பினார் கோயிலுக்குக் குமாரபாளையம் என்ற ஊரைத் தானமாகக் கொடுத்துள்ளார். அப்போது ஆறகழூரில் வசித்து வந்த நல்லகுடியைச் சேர்ந்த நாற்பத்தெண்ணாயிரம் என்பவர்களை குமாரபாளையத்தில் புதிய குடிகளாகக் குடியேற அனுமதி அளித்துள்ளனர். இந்த நாற்பத்தெண்ணாயிரவர் என்பவர்கள் வேளாண்மை மற்றும் வணிகம் செய்த குடிகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

 ‘வீடுகளில் துளையிட்டுத் திருடும் கன்னமிட்டவன், பயணத்தின்போது வழிமறித்துத் திருடும் வழிப்பறிச்சவன், மற்றவர்கள் பொருள்களை அபகரிக்கும் எடுப்பு எடுத்தவன் போன்ற குற்றச்செயல்களைச் செய்தவர்களை ஒரு போதும் குமாரபாளையத்தில் குடியேற்றக்கூடாது’ என ஆணையிட்டுள்ளனர். ‘அங்குக் குடியேறும் நற்குடியினர் எல்லா உரிமைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இந்தத் தானத்தையும் கட்டளையையும் மீறுபவர்கள் ஒன்றுமில்லாமல் போவார்கள். இந்த தானத்தை அழிப்பவர்கள் கங்கைக் கரையிலே காராம் பசுவைக் கொன்ற பாவத்தை அடைவார்கள்’ என்று கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. 

கல்வெட்டுகள்

இந்தக் கல்வெட்டுக்கு அருகே நவகண்ட சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. போரின்போது தனது உடலில் ஒன்பது இடங்களில் அரிந்து, படையல் இட்டுத் தன்னைத் தானே பலி கொடுத்துக்கொண்ட வீரனுக்காக வைக்கப்பட்ட நவகண்ட சிற்பம் இது. மேலும், வயல்வெளிகளில் கறுப்பு மற்றும் சிவப்பு நிறப் பானை ஓடுகள் காணப்படுகின்றன. எனவே, இந்த இடம் மக்களின் வாழ்விடங்களாக இருந்திருக்கலாம். இந்தப் பகுதியில் ஆய்வு செய்தால் மேலும் பல வரலாற்று சான்றுகள் கிடைக்கலாம்.

இதை அறிந்த  ஆறகழூர் வெங்கடேசன் மேலும் கூறுகையில், “இந்தப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுகள் மற்றும் நடுகற்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க