வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (27/12/2018)

கடைசி தொடர்பு:06:59 (28/12/2018)

கடலூர் பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கி பணப்பையைப் பறித்த இளைஞர்கள் கைது!

கடலூர் அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை வெட்டி பணப்பையைப் பறித்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களுடன் போலீஸார்

கடலூர் மாவட்டம் புதுச்சந்திரம் - பரங்கிப்பேட்டை சாலையில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த பங்கில் பால்வார்த்துள்ளான் கிராமத்தை சேர்ந்த சிவசங்கரன் (38) பணியில் இருந்துள்ளார். நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் வண்டிக்கு பெட்ரோல் நிரப்பியுள்ளனர். ஆனால், பெட்ரோலுக்குப் பணத்தைக் கொடுக்காமல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சிவசங்கர் தலையில்
வெட்டியுள்ளனர். இதனால் சிவசங்கர் நிலைகுலைந்துள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த சிவசங்கரன்

இதைப் பயன்படுத்தி அவர் கையில் வைத்திருந்த பணப்பையைப் பறித்துக்கொண்டு தப்பியுள்ளனர். உடன் அங்கிருந்தவர்கள் அவர்களைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் வேகமாகத் தப்பி சென்றுவிட்டனர். தலையில் படுகாயமடைந்த சிவசங்கரை அருகில் இருந்தவர்கள் காப்பாற்றி கடலூர் அரசு மருத்துவமனையில்  சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு சிவசங்கரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த கடலூர் எஸ்.பி சரவணன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பெட்ரோல் பங்கில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு இளைஞர்களை தேடி வந்தனர். 

சிசிடிவி காட்சிகள்

இதனிடையே,  குற்றவாளிகள் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சின்னூர் என்ற கிராமத்தில் தங்கியிருப்பதாகப் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த இடத்துக்கு விரைந்த போலீஸார், பெட்ரோல் பங்க் ஊழியரைத் தாக்கிவிட்டு பணப்பையை எடுத்துச் சென்றவர்களைக் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் நாவல்குளம் பகுதியைச் சேர்ந்த மணி (எ) குரு (24), புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் தேவா (23) என்று தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டவை

இதில் முக்கிய குற்றவாளி கரிக்கலாம்பாக்கம் சுரேஷ் தப்பியுள்ளார். அவரைக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம், பணப்பை உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் இரவில் இதுபோன்று சிதம்பரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள  பகுதிகளில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.