கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான தாத்தா, பேரன் - மணல் குவாரிதான் காரணம் என குற்றச்சாட்டு | Grand father and Grand son died in water

வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (28/12/2018)

கடைசி தொடர்பு:07:20 (28/12/2018)

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி பலியான தாத்தா, பேரன் - மணல் குவாரிதான் காரணம் என குற்றச்சாட்டு

கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற தாத்தா, பேரன் இருவரும் நீரில் மூழ்கிப் பலியாயினர். கொள்ளிடம் ஆற்றில் உள்ள  மணல் குவாரியால் தொடர் உயிரிழப்பு ஏற்படுகிறது. இக்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் அரியலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மீட்புப்பணி

அரியலூர் மாவட்டம் விளாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். அவரின் பேரன் கெளதம் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் நேற்று மாலை கொள்ளிடம் ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்த நிலையில், ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த முருகேசன் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதைக் கண்ட அவரின் பேரன் கெளதம், தாத்தாவைக் காப்பாற்றும் வகையில் நீரில் மூழ்கியுள்ளார். இருவரும் காணாததைக் கண்ட அருகில் இருந்தவர்கள் உறவினர்களுக்குத் தகவல் கொடுத்துவிட்டு அவர்களும் தண்ணீரில் மூழ்கி இருவரையும் தேடியுள்ளனர்.

மணல் குவாரியால் பலியான முருகேசன்

இதுகுறித்து கிராம மக்கள் அரியலூர் தீயணைப்புத் துறை மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் பொதுமக்கள் கொள்ளிடம் ஆற்றில் இறங்கிக் காணாமல் போன தாத்தா மற்றும் பேரன் ஆகிய இருவரையும் தேடியுள்ளனர். நீண்ட நேரத்துக்குப் பிறகு இருவரும் சடலமாக மீட்கப்பட்டனர். இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காகத் தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற தாத்தா பேரன் ஆகிய இருவரும் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கெளதம்

இந்த நிலையில், கொள்ளிடம் ஆற்றில் செயல்படுத்தப்பட்ட மற்றும் செயல்படுத்தப்படும் மணல் குவாரிகளால் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவதாகக் கூறி மணல் குவாரியை உடனே தடை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் விளாங்குடியில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதையடுத்து, போலீஸார் மற்றும் வருவாய்த் துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கலைந்து சென்றனர் இதனால் தஞ்சாவூர் அரியலூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.