அணுமின் நிலையம் குறித்து தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள்-உதயகுமார்

நெல்லை: அணுமின் நிலையம் வேண்டுமா, வேண்டாமா? என்பது குறித்து தேர்தலில் மக்கள் தீர்மானிப்பார்கள் என போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறினார்.

'பெரும்பான்மை மக்களின் நலன் கருதி கூடங்குளம் அணுமின் நிலையத்தை இயக்குவதற்கு தடை விதிக்க முடியாது' என சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து அணு சக்திக்கு எதிரான போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கூறியதாவது:-

சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு துரதிர்ஷ்டவசமானது. அந்த தீர்ப்பை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த தீர்ப்பு எங்களது நிலையை மாற்றாது. எங்களை கட்டுப்படுத்தாது. ஒரு இனத்தின் எதிர்காலத்தை ஒரு சில நீதிபதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உறுதி செய்ய முடியாது. மக்கள் மன்றத்தைத்தான் நம்புகிறோம்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சார்பில் தான் வழக்கு தொடரப்பட்டது. நாங்கள் வழக்கு தொடரவில்லை. இந்த வழக்கில் மக்களின் பாதுகாப்பு, நஷ்டஈடு வழங்குதல், தரமான உதிரிபாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்த விவாதங்கள் நடைபெறவில்லை.

மக்களுக்கு மின்சாரம் வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் இந்த தீர்ப்பு இந்த பகுதி மக்களுக்கு எதிரான தீர்ப்பு. கூடங்குளம் அணுமின்நிலையம் வேண்டுமா, வேண்டாமா? என்று தேர்தல் மூலம் மக்கள் தீர்மானிப்பார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான வழக்கு விசாரணை 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முடிவடைந்தது. ஆனால் அப்போதே தீர்ப்பு வழங்காமல் இதுவரை காலதாமதம் செய்தது ஏன்?. கூடங்குளம் அணுஉலையில் பயன்படுத்தப்பட்ட உதிரிபாகங்கள் அனைத்தும் தரமற்றவை. இந்த அணுமின் நிலையத்தால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது.

தமிழ்நாட்டின் மின் தேவையை இது பூர்த்தி செய்யாது. இது ஒரு ஆபத்தான மோசமான தொழில்நுட்பம். இதில் தரம் குறைந்த பொருட்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். இதை நாங்கள் நிரூபித்திருக்கிறோம். அணுஉலை பணிகள் தொடங்கியது முதல் இதுவரை பல விபத்துகள் நடந்து கொண்டே இருக்கிறது.

அணுஉலை கழிவு, இழப்பீடு பற்றி இன்னும் பேசப்படவில்லை. மக்களை பற்றி கவலைப்படாமல் மக்கள் விரோத தீர்ப்பை கொடுத்துள்ளனர். இதை கண்டிக்கிறோம். இது தேர்தல் பிரச்னையாக மாற்றப்படும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு குறித்து இன்று உடனடியாக ஊர் தலைவர்களை அழைத்து அவர்களுக்கு விளக்குவோம். மக்களிடம் கருத்து கேட்டு எங்களது அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வோம்.

இவ்வாறு உதயகுமார் கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!