வெளியிடப்பட்ட நேரம்: 06:20 (28/12/2018)

கடைசி தொடர்பு:10:42 (28/12/2018)

``அதே இடம்.. அதே நோக்கம்..!" - செந்தில் பாலாஜியைச் சாடும் அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்

தி.மு.கவுக்குத் தாவிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஸ்டாலினை அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தி இருக்கிறார். அந்தக் கூட்டத்தில் 30,425 பேர்களை தி.மு.க-வில் இணைத்திருக்கிறார். கரூர் கோவை பைபாஸ் ரவுண்டானா சாலையிலிருந்து ஸ்டாலினுக்கு தடபுடல் வரவேற்பு கொடுத்ததோடு, அவரை ஊர்வலமாகப் பொதுக்கூட்டம் நடைபெறும் ராயனூருக்கு அழைத்து வந்தார். இந்நிலையில், ``அதே இடம்... அதே நோக்கம்!" என்று செந்தில் பாலாஜியை அதிரடியாக விமர்சிக்கிறார் முன்னாள் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் கரூர் சாகுல் அமீது.

 ஸ்டாலினோடு செந்தில்பாலாஜி 

அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளராகவும், கரூர் மாவட்டச் செயலாளராகவும் இருந்தவர் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி. டி.டி.வி.தினகரனோடு ஏற்பட்ட மனக்கசப்பால், கடந்த 14-ம் தேதி முன்னாள் அமைச்சர் கரூர் சின்னசாமியின் தலைமையில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் ஐக்கியமானார். அதோடு, இன்று கரூர் ராயனூர் பெட்ரோல் பங்கிற்கு முன்பு உள்ள திடலில் கட்சி மாநாடு போல் பொதுக்கூட்டம் நடத்தினார். சென்னை அண்ணா அறிவாலயம் அமைப்பிலான பிரமாண்ட மேடை, மேடைக்கு ஸ்டாலின் போகும் வழியில் இருமங்கிலும் வாழைமரங்கள், ஸ்டாலினுக்கு கரூர் முழுக்க வானுயர கட் அவுட்கள், பதாகைகள், வான வேடிக்கைகள் என்று ஏற்பாட்டில் தூள் கிளப்பினார்.


 பொதுக்கூட்டத்திற்கு வந்த கூட்டம்

மேலும் பொதுக்கூட்ட மேடைக்கு ஸ்டாலினை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவரை நூறு பெண்கள் கைகளில் மாவிளக்கு தட்டுகள் ஏந்தி வரவேற்றனர். ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதையும் செலுத்தப்பட்டது. மயிலாட்டம், ஒயிலாட்டம், செண்டை மேளம் என்று பிரமாத வரவேற்பும் கொடுத்தார். 

கரூர் சாகுல் அமீது(அ.தி.மு.க கரூர் மாவட்ட முன்னாள் செயலாளர்)

இந்த நிலையில், நம்மிடம் பேசிய அ.தி.மு.க முன்னாள் கரூர் மாவட்டச் செயலாளர் கரூர் சாகுல் அமீது, ``செந்தில்பாலாஜி பதவி வாங்க இதுவும் பண்ணுவார், இதற்கும் மேலையும் பண்ணுவார். 2006-ல் அம்மாகிட்ட நெருங்க எந்த இடத்தில் டிராமா பண்ணினாரோ, அதே இடத்தில் ஸ்டாலினை கவுக்க படாடோபம் பண்ணி இருக்கிறார் செந்தில்பாலாஜி. 2006-ம் ஆண்டு செந்தில் பாலாஜி இளவரசி மூலமா சீட் வாங்கி, கரூர் எம்.எல்.ஏவாக ஜெயிச்சார். ஆனா, அம்மாவுக்கு இவரை யாருன்னே தெரியாது. அம்மாகிட்ட தன்னை வெளிப்படுத்துவதற்காக, 2006-ம் ஆண்டு காவல்துறை மற்றும் சில மீடியாவை வச்சுக்கிட்டு ஒரு டிராமா பண்ணினார். அப்போ தி.மு.க ஆட்சியில் காவிரியில் நடந்த மணல் கொள்ளைக்கு எதிராக போராடுறேன்னு சொல்லி, இதே கரூர் கோவை பைபாஸ் ரவுண்டானா சாலையிலிருந்து போராட்டம் பண்ணினார். அப்போ தி.மு.க மாவட்டச் செயலாளராக இருந்த வாசுகி முருகேசன் தரப்பும் பதிலுக்குப் போராட, கைகலப்பாயிற்று. வாசுகி முருகேசனையே குச்சியால் அடித்துவிட்டார்.  அதை ஜெயா டி.வியில் திரும்பத் திரும்ப போட வைத்து, நாடகம் நடத்தி அம்மா பார்வையில் பட்டதால், 2007-ல் அ.தி.மு.கவின் மாவட்டச் செயலாளர் ஆனார்.

ஆனால், இவர் நடத்தியது நாடகம்ன்னு தெரியாத அப்போதைய அ.தி.மு.க தோகைமலை இளைஞரணி ஒன்றியச் செயலாளரான கருப்பையா என்பவர் வாசுகி முருகேசன் தரப்புக்கிட்ட மாட்டிக்கொண்டார். அவரை சீரியஸாகும் அளவுக்கு அடிச்சு நையப்புடைச்சுட்டாங்க. அதே செந்தில்பாலாஜிதான், யாருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி அ.தி.மு.க-வில் பதவி வாங்கினாரோ, அதே கட்சிக்கு போயிருக்கிறார். அதுவும் தி.மு.கவிலும் மாவட்டச் செயலாளர் பதவி வாங்க ஸ்டாலினுக்கு அதே கரூர் கோவை பைபாஸ் ரவுண்டானா சாலையில் இருந்து பிரமாண்ட வரவேற்பு கொடுத்திருக்கிறார். அதே இடம், அதே நோக்கம்தான் செந்தில்பாலாஜிக்கு. இன்றைக்கு அவர் தி.மு.க-வில் சேர்த்த கூட்டம் தானா சேர்ந்த கூட்டம் இல்லை. தலைக்கு 300 ரூபாய் கொடுத்து கூட்டி வந்த கூட்டம்" என்றார் அதிரடியாக.