`நாங்க செத்தாலும் கவலையில்லை, அவங்களுக்குப் பணம் தான் முக்கியம்!’ - கண்ணீருடன் புகார் அளித்த பெண் | Woman complained to the police regarding bank issues

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (28/12/2018)

கடைசி தொடர்பு:10:27 (28/12/2018)

`நாங்க செத்தாலும் கவலையில்லை, அவங்களுக்குப் பணம் தான் முக்கியம்!’ - கண்ணீருடன் புகார் அளித்த பெண்

கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீள முடியாத நிலையில், வாங்கிய கடனை உடனடியாக செலுத்த வேண்டும் எனத் தனியார் நிதி நிறுவன மேலாளர் வசூலுக்கு வந்து மிரட்டுவதாகப் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்குதலுக்குப் பிறகு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். விவசாயப் பயிர்கள் அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், விவசாயத்துக்காக வாங்கிய கடனை கட்ட முடியாமல் பரிதவிக்கின்றனர். இந்த நிலையில்தான் கடனை திரும்பிச் செலுத்த  6 மாத கால அவகாசம் வழங்க வேண்டும். மேலும், 6 மாத காலத்துக்கு தவணை கேட்கக்கூடாது என்று அறிவிக்க வேண்டும் என்று கடந்த ஒரு மாதமாக ஆட்சித்தலைவர் அலுவலகம் ஏறி இறங்கியதுடன், ஆட்சியரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் பலனாக, ஆட்சியரும் 6 மாதங்களுக்குத் தவணை கட்ட வேண்டாம். இதுகுறித்து தனியார் நிதி நிறுவனங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்ப உத்தரவிட்டார். இந்த நிலையில்தான் ஆட்சியரின் உத்தரவையும் மதிக்காமல் பல தனியார் நிதி  நிறுவன அதிகாரிகள் வீட்டுக்கே நேரடியாக வந்து தங்களை மிரட்டி வருவதாகப் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.

கீரமங்கலம் அருகே, குளமங்கலம் வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பொண்ணு (49). இவரிடம் தனியார் நிதி நிறுவன மேலாளர் ஆனந்தி என்பவர் உடனடியாக கடனைக் கட்டச்சொல்லி தொல்லை கொடுப்பதாக கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர்.

இதுகுறித்து சின்னப்பொண்ணுவிடம் பேசினோம்,

`` ரொம்ப வருஷமா மீன் விலைக்கு வாங்கி வந்து அதை விற்றுத்தான் பிழைப்பு நடத்திக்கிட்டு வர்றேன். கடன் வாங்கி இருக்கிறேன். இல்லையின்னு சொல்லலை. ஆனால், கட்டுகிறதுக்குத்  தானே கால அவகாசம் கேட்கிறோம். அதக்கொடுத்தா இன்னா கொறஞ்சா போயிறுவாங்க. அதவிட்டுட்டு வீட்டுக்கு வந்து மிரட்டுறாங்க. வீட்டுக்கு ஒரு தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த மேலாளர் ஆனந்தி என்பவர் வந்தாங்க. அவங்க கிட்ட கஜா புயலால் ஏற்பட்ட நெருக்கடி, என்னோடா சூழ்நிலையைச் சொன்னேன். ஆனால், அதைக் கொஞ்சம் கூட காதில் வாங்கலை.

கொடுத்த பணத்தை இப்போதே வட்டியோடா வைக்கணும்னு சொன்னாங்க. இப்போது என்னால் கட்ட முடியாதுன்னு சொல்லி விட்டேன். ஆட்சியர் தான் 6 மாதம் வரையிலும் கட்ட வேண்டாம்னு சொல்லி இருக்காறே என்று கேட்டபோது, கடன் ஆட்சியர் கொடுக்கவில்லை, நாங்கள் தான் கொடுத்தோம் என்று எகத்தாளமாக சொல்றாங்க.``நாங்க செத்தாலும் கூட அவங்களுக்குக் கவலை இல்லை. பணம்தான் அவங்களுக்கு முக்கியம்" என்று கூறியபடி கண்ணீர்விட்டு அழுதார்.

கடனை வசூலிக்கத் தொடர்ச்சியாக வந்துக்கிட்டே இருக்காங்க. கடன் கேட்டு மிரட்டினால் புகார் அளிக்கலாம் என்று ஆட்சியர் தெரிவித்ததின் பேரில் தான் தற்போது புகார் அளித்துள்ளேன். போலீஸார் மற்றும் ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.