வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (28/12/2018)

கடைசி தொடர்பு:10:10 (28/12/2018)

`தினமும் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கி சாகிறேன்' - அற்புதம்மாள் வேதனை!

48 மணி நேரத்தில் பதில் கேட்டு 48 நாளும் ஆகிவிட்டது இன்னும் பதில் வரவில்லை எனப் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக அற்புதம்மாள் கேள்வி எழுப்பியுள்ளார்.

அற்புதம்மாள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக, தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரைக்கலாம் எனக் கடந்த செப்டம்பர் மாதம் 6-ம் தேதி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கினார். இதன் பின்னர் செப்டம்பர் 9-ம் தேதி, தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூட்டப்பட்டு, அதில் எழுவர் விடுதலை தொடர்பாக ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால், அதன் மீது பல நாள்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. 7 பேரையும் விடுவிக்க வேண்டும் எனப் பலரும் குரல்கொடுத்து வருகின்ற நிலையில் பேரறிவாளன் விடுதலைக்காக அவரின் தாயார் அற்புதம்மாள் தொடர்ந்து போராடி வருகிறார். அதன் ஒருபகுதியாக அற்புதம்மாள் ட்விட்டர் பக்கத்தில்  பேரறிவாளன் விடுதலை தொடர்பாக பதிவு வெளியிட்டுள்ளார். 

அற்புதம்மாள்

ஆளுநர் விடுதலைக் கோப்பில் கையெழுத்திடத் தாமதத்துக்கான காரணம் கேட்டு பேரறிவாளன் கடந்த 8.11.2018 அன்று புழல் சிறை மூலம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு அனுப்பினார். 48 மணி நேரத்தில் தகவல் தரக் கேட்டு அனுப்பப்பட்ட அவ்விண்ணப்பம் 48 நாள்களுக்குப் பிறகும் ஆளுநர் மாளிகை தகவல் அதிகாரி பதிலளிக்காத நிலையில் RTI மனுவை மேற்கோள் காட்டி மிகுந்த வேதனையோடு தனது உணர்வுகளை ட்விட்டரில் அற்புதம்மாள் பதிவிட்டுள்ளார்.

RTI மனு

அதில், ``விடுதலைக் கோப்பு கையெழுத்தாகல. தினம் நம்பிக்கை அவநம்பிக்கைக்கிடையே சிக்கிச் சாகிறேன். தாமதம் ஏன்னு கேட்டு அறிவு ஒரு RTI அனுப்பினான். 48 மணி நேரத்துல பதில் கேட்டு 48 நாளும் ஆயிருச்சு. பதில காணோம். அரசியல் சட்டத்துக்குத்தான் மதிப்பில்ல. RTI யுமா செல்லாம போயிரும்?" எனக் கூறியுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க