அமைச்சர் பயன்படுத்திய காருக்கு பெட்ரோல் போட மறுத்த அண்ணா பல்கலைக்கழகம்!  | Anna University cuts fuel for higher education minister cars

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (28/12/2018)

கடைசி தொடர்பு:12:15 (28/12/2018)

அமைச்சர் பயன்படுத்திய காருக்கு பெட்ரோல் போட மறுத்த அண்ணா பல்கலைக்கழகம்! 

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும், அவரது துறைச் செயலரும் மறைமுகமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் ஐந்து  கார்களைப் பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த கார்களுக்குப் போடப்பட்ட பெட்ரோல் பில்லுக்குப் பணம் தர முடியாது என அண்ணா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது உயர்கல்வித் துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 50-க்கும் மேற்பட்ட துறைகளும், மையங்களும் உள்ளன. இந்த மையங்களின் செயல்பாட்டுக்கு உதவும் வகையில் தனித்தனியே கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில், ஐந்து கார்களை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகனும், அவரது துறைச் செயலரும் மறைமுகப்படுத்தி பயன்படுத்தி வந்துள்ளனர். இதற்கான எரிபொருள் கட்டணத்தை நீண்ட நாள்களாக அண்ணா பல்கலைக்கழகம் செலுத்தி வந்துள்ளது.

அமைச்சரும், செயலரும் கார்களைப் பயன்படுத்துவதால் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறை அதிகாரிகள் தனியார் வாகனங்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். இதற்கான செலவினத்தை பல்கலைக்கழகத்தின் கணக்கில் காண்பித்துள்ளனர். எரிபொருளுக்கான செலவு செய்தும், தனியார் கார்களுக்கான கட்டணத்தையும் செலுத்தியிருப்பதும் எதற்காக எனக் கேள்வி எழுப்பப்பட்ட போதுதான், அமைச்சரும், செயலரும் கார்களை மறைமுகமாகத் தொடர்ந்து பயன்படுத்துவதும், அதற்கான எரிபொருள் கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் தொடர்ந்து செலுத்தி வருவதும் தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக, எரிபொருள் நிரப்புவதை நிறுத்தும்படி பெட்ரோல் நிலையத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் உயர்கல்வித் துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

அண்ணா பல்கலைக்கழகம்

அண்ணா பல்கலைக்கழகத்தின் காரைப் பயன்படுத்துவது குறித்த செய்தி வெளியானதால், உடனடியாக, உயர்கல்வித் துறை செயலர் அண்ணா பல்கலைக்கழகத்தின் காரை ஒப்படைத்துள்ளார். மற்ற பல்கலைக்கழகங்களின் வாகனங்களையும் உயர்கல்வித் துறை அதிகாரிகள் பயன்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.