`என் படம் செலக்ட் ஆனதுல சந்தோஷம்; அவார்டு வாங்கணும்! - சிலிர்க்கும் இளம் இயக்குநர் | This transgender makes his remarkable success in recent short film

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (28/12/2018)

கடைசி தொடர்பு:13:25 (28/12/2018)

`என் படம் செலக்ட் ஆனதுல சந்தோஷம்; அவார்டு வாங்கணும்! - சிலிர்க்கும் இளம் இயக்குநர்

இளம் இயக்குநர் பிரவீன்குமார் அண்ட் டீம் இயக்குனர் ரஞ்சித்தோடு

திருநங்கைகளின் வாழ்வியலையும் அவர்களின் உணர்வு ரீதியிலான போராட்டங்களைப் பற்றியும் வெளிவரும் படைப்புகள் சமீப காலங்களில் அதிகரித்திருக்கின்றன. குறும்படங்களாகவும் ஆன்லைன் தொடர்களாகவும் பல படைப்புகள் இளைய தலைமுறையினரிடம் எளிதில் சென்றடைகின்றன. அதில் சில படைப்புகள் இந்திய அளவில் கவனத்தைப் பெறத் தவறுவதில்லை. சென்னையைச் சேர்ந்த பிரவீன்குமார் இயக்கியிருக்கும் `திருத்தாய் அவளே' குறும்படம் 'சினி ஃபர்ன் இன்டர்நேஷனல் ஆன்லைன் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' தேர்வுக்குழுவில் இடம் பிடித்திருக்கிறது. 

இளம் இயக்குநர் பிரவீன்குமார்

``இது ரொம்பவே சந்தோஷமான தகவல்தான். `சினி ஃபர்ன் இன்டர்நேஷனல் ஆன்லைன் ஃபிலிம் ஃபெஸ்டிவல்' போன அக்டோபர்ல இருந்து ஆரம்பிச்சிருக்காங்க. ஷார்ட் ஃபிலிம்ஸ், டாக்குமெண்டரி, எல்.ஜி.பி.டி, அனிமேஷன் உட்படப்  பல பிரிவுகள் இதுல இருக்கு. ஒவ்வொரு மாதமும் ஒரு படத்தைத் தேர்வு செய்து மொத்தம் 11 படங்களை ஃபைனல்ல ஸ்க்ரீன் பண்ணுவாங்க. இதுவரை எல்.ஜி.பி.டி பிரிவுக்கு இந்தியாவுல இருந்து தேர்வாகிற முதல் குறும்படம் `திருத்தாய் அவளே' தான். இதுக்கு முன்னாடி வரை ஃபாரின் ஃபிலிம்தான் செலக்ட் ஆகியிருந்தது. ஏன்னா, அவங்க எல்.ஜி.பி.டி -க்காகவே தனிப்பிரிவு வெச்சிருக்காங்க. அதனால, அதிகளவுல திருநங்கைகளை வெச்சுப் படம் பண்றாங்க. நாமதான் குறைவான படங்களை எடுக்கிறோம். இந்த முறை என் படம் செலக்ட் ஆனதுல எனக்கு சந்தோஷம்தான். ஆனாலும், ஃபைனல் வரை வந்து பெஸ்ட் ஃபிலிம் அவார்டு வாங்கணும்னு எதிர்பார்க்கிறேன். ஏன்னா நம்ம கான்செப்ட் வெயிட்டா இருக்கு” என்றவர் சட்டென,

``ஒருவேளை நம்ம படம் ஃபைனல் வரலைனாலும் பரவாயில்லை. ஏன்னா, அவங்களோட எதிர்பார்ப்பு எப்படி இருக்குன்னு தெரியலை. ஆனாலும், ஒவ்வொரு முறையும் ஆங்கிலப் படங்களாவே இருந்த ஃபிலிம் லிஸ்ட்ல இப்போ ஃபர்ஸ்ட் டைம் தமிழ்ப் பெயர் வந்ததால நான் ஹேப்பி. வேர்ல்டு ஃபுல்லா நம்மள திரும்பிப் பார்ப்பாங்களே” என்கிறார் பெருமை பொங்க.