சென்னைப் பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதா? - மாங்காடு பெண் அதிர்ச்சி புகார் | hiv blood transfer to pregnant lady in chennai mangadu

வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (28/12/2018)

கடைசி தொடர்பு:12:30 (28/12/2018)

சென்னைப் பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதா? - மாங்காடு பெண் அதிர்ச்சி புகார்

சாத்தூரில் ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதைப் போல தனக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்டதாக சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் மனைவி, இரண்டாவது முறையாகக் கர்ப்பமடைந்துள்ளார். 8 மாத கர்ப்பிணியான அவர், சாத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். இந்த நிலையில், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ரத்தம் குறைவாக இருப்பதால் அவருக்கு ரத்தம் ஏற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். அதன்படி, கடந்த 20 நாள்களுக்கு முன் அவருக்கு ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. ஆனால், 4 நாள்களுக்குப் பின் அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது. எனவே, அரசு மருத்துவர்கள் அவரைப் பரிசோதனை செய்தபோது, அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அரசு மருத்துவமனையில் செலுத்தப்பட்ட ரத்தத்தின்மூலம் அவருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு வந்தது. இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தற்போது இதேபோன்ற சம்பவம் தனக்கு நடந்துள்ளதாகச் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் கூறியுள்ளார். அந்தப் பெண் நடந்த சம்பவத்தை விவரித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், ``குழந்தை பெறுவதற்காக சென்னை மாங்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். கடந்த ஏப்ரல் மாதம் எனக்கு `ரத்த சோகை' ஏற்பட்டதாகவும், இதனால் எனக்கு ரத்தம் செலுத்த வேண்டும் எனக் கூறி மாங்காடு மருத்துவமனை நிர்வாகம் கூறியது. உடனே மருத்துவமனை நிர்வாகமே, 108 ஆம்புலன்ஸ் மூலம் என்னை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. அங்கு 10 நாள்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்தேன். அதற்கு முன்னதாக எடுத்த பரிசோதனைகளில் எனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை என வந்தது. ஏப்ரல் 5-ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்து எனக்கு 2 பாட்டில்கள் ரத்தம் செலுத்தப்பட்டது. இதற்கடுத்து நான்கு மாதங்கள் கழித்து ஆகஸ்ட் 18-ம் தேதி 8 மாத கர்ப்பிணியாக இருக்கும்போது பரிசோதனை செய்ததில் எனக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இருந்ததாகக் கூறினார்கள். மாங்காடு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைகளைத் தவிர வேறு எங்கும் நான் சிகிச்சை எடுக்கவில்லை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது" எனக் கூறி கலங்கினார்.

கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை

``ஏற்கெனவே எனக்கு ஒரு குழந்தை இருக்கிறது. அப்போதும் எனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. என் கணவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என அரசு மருத்துவமனையே கூறிவிட்டது. அப்படி இருக்கையில் எனக்கு மட்டும் எப்படிப் பாதிப்பு வரமுடியும். மருத்துவமனையில் கேட்டால் எங்களுக்கு எப்படித் தெரியும் எனக் கூறுகிறார்கள். மருத்துவமனையின் அலட்சியத்தைச் சுட்டிக்காட்டி இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனை நிர்வாகம், மாங்காடு மருத்துவமனை நிர்வாகம் என அனைவருக்கும் புகார் மனு அனுப்பிவிட்டேன். ஆனால் அதைப் படித்தார்களா இல்லையா எனக் கூட தெரியவில்லை. இதுவரை எனது வீட்டைத் தேடி யாரும் வரவில்லை. 

சமூகத்துக்குப் பயந்து தான் இத்தனை நாள் நான் வெளியில் வரவில்லை. நெருங்கிய உறவினர்களே என்னை ஒதுக்கிவிட்டார்கள். யார் வீட்டுக்கும் வரக்கூடாது எனக் கூறியதால் எங்கும் செல்லவில்லை. அதனால் தான் புகார் மனுவை மட்டும் அனுப்பி வந்தேன். தற்போது என்னைப் போலவே இன்னொரு பெண்ணும் பாதிக்கப்பட்டது தெரிந்தது. இனிமேலும் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே தற்போது இதைக் கூறுகிறேன். எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு நியாயம் வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். தற்போது இவருக்குக் குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆகிவிட்டன. குழந்தைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. இருப்பினும் மருத்துவமனையின் அலட்சியத்தால் தற்போது மேலும் ஒரு பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் அடுத்த பூதாகரத்தை கிளப்பியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க