குளிக்கப் போன இடத்தில் தகராறு! - தாத்தா, பேரன் கொலைக்குக் காரணமான முன்விரோதம் | Reason for double murder in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (28/12/2018)

கடைசி தொடர்பு:13:50 (28/12/2018)

குளிக்கப் போன இடத்தில் தகராறு! - தாத்தா, பேரன் கொலைக்குக் காரணமான முன்விரோதம்

தூத்துக்குடியில் அதிகாலையில் நடுரோட்டில் தாத்தா, பேரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முன்விரோதம்தான் காரணம் என போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

படுகொலை செய்யப்பட்ட தாத்தா, பேரன்

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகில் உள்ளது பக்கபட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்  ராமையா. விவசாயியான இவருக்குச் சுடலை மணி என்ற மகனும் கவிதா, சத்யா என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். சுடலைமணி, நெல்லையில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடையில் வேலைபார்த்து வந்துள்ளார். தினமும் பக்கபட்டியில் இருந்து பேருந்தில் நெல்லைக்கு வேலைக்குச் சென்று வருவது வழக்கம். வழக்கம்போல, கடந்த புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில் முறப்பநாடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி உள்ளார். சுடலைமணியை அழைத்துச் செல்வதற்காக அவரது தாத்தா முத்துச்சாமி பக்கபட்டி விலக்கில் காத்திருந்தார்.

பக்கபட்டியில் போலீஸ்

பேருந்தில் இருந்து இறங்கிய சுடலைமணி, பக்கபட்டி விலக்கு நோக்கி நடந்து சென்றாராம். அப்போது, இருட்டுப் பகுதியில் மறைந்திருந்த மர்மநபர்கள் சுடலைமணியைப் பின் தொடர்ந்து அரிவாளால் வெட்டினர். இதைப்பார்த்துப் பதறிய சுடலைமணியின் தாத்தா முத்துச்சாமி கூச்சலிட்டபடியே தடுக்க முயன்றுள்ளார். அவரையும்  வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில், சுடலைமணிக்கு தலைப்பகுதியில் பலத்த வெட்டுக்காயமும், முத்துசாமிக்கு தலை, கழுத்து ஆகிய பகுதிகளிலும் பலமான வெட்டுக்காயமும் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தனர். இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, அப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.

இந்த இரட்டைக்கொலைச் சம்பவம் முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா அல்லது காதல் விவகாரத்தால் நடைபெற்றதா என போலீஸார் தீவிர விசாரணையில் நடத்தி வந்தனர். ஆனால், முன்விரோதத்தால்தான் இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸாரிடம் பேசினோம். ``கொலை செய்யப்பட்ட சுடலைமணியும், அவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த வடிவேல்முருகன் என்பவரும் கடந்த மே மாதம் முறப்பநாடு தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சின்னதம்பி என்பவரும் குளிக்க வந்துள்ளார். சின்னதம்பி குளிக்க ஆற்றில் இறங்கியபோது வடிவேல்முருகன் எதிர்ப்பு தெரிவித்து அவரது சாதியைக் கூறி அவதூறாகப் பேசினாராம். அத்துடன், வடிவேல்முருகன், சின்னத்தம்பியை அரிவாளால் வெட்டியதாகவும் இதுகுறித்து, சின்னதம்பி அளித்த புகாரின் அடிப்படையில், முறப்பநாடு போலீஸார், தீண்டாமை வன்கொடுமை தடுப்புச்சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வடிவேல்முருகனை கைது செய்தனர்.

பக்கபட்டியில் குவிக்கப்பட்ட போலீஸ்

சுடலைமணியும் சின்னதம்பியும் சேர்ந்துதான் வடிவேல்முருகனை தாக்கி உள்ளனர். ஆனால், வடிவேல்முருகன், சின்னதம்பி மீது மட்டுமே போலீஸில் புகார் அளித்துள்ளார். இதனால், சுடலைமணிக்கும் வடிவேல்முருகனுக்கும் இடையில் தொடர்பு உள்ளதாகக் கூறி, சின்னதம்பி, சுடலைமணியிடம் பேசுவதை நிறுத்திவிட்டாராம். தொடர்ந்து இருவருக்கும் மோதல் நிலையே ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில்தான், சுடலைமணியைக் கொலை செய்ய சின்னதம்பி திட்டமிட்டாராம்.

அதன்படி சுடலைமணியைக் கொலை செய்ய முயன்றபோது, அவரது தாத்தா முத்துசாமி தடுக்க முயன்றதால் அவரையும் கொலை செய்துள்ளனர்” எனக் கூறினர். இதுதொடர்பாக சின்னதம்பி, அவரது அண்ணன் மாரிமுத்து, தம்பி அருண்குமார், மற்றும் அவரது உறவினர் மற்றொரு சின்னதம்பி ஆகிய நான்கு பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.  முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க