`எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போராடிக்கிட்டிருக்கோம்!' - ஆசிரியர்கள் வேதனை | Tamilnadu secondary school teacher protest continues on 5th day

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (28/12/2018)

கடைசி தொடர்பு:14:10 (28/12/2018)

`எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போராடிக்கிட்டிருக்கோம்!' - ஆசிரியர்கள் வேதனை

`எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போராடிக்கிட்டிருக்கோம்!' - ஆசிரியர்கள் வேதனை

மிழ்நாடு இடைநிலை ஆசிரியர்கள்,  `சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னையிலுள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் ஐந்தாவது நாளாக தங்களுடைய போராட்டத்தை நடத்திவருகின்றனர். இன்று துப்புரவுப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களிடம் பேசினோம்.

ஆசிரியர் துப்புரவுப் போராட்டம்

``இங்கே பல ஊர்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் வந்திருக்கிறோம். நாங்க யாரும் அளவுக்கு அதிகமா ஊதியம் கேட்கலை. எங்களோட சீனியர் ஆசிரியர்கள் வாங்குற தொகையை எங்களுக்கும் கொடுங்க. நாங்களும் தகுதித் தேர்வுல பாஸாகிதானே வேலைக்கு வந்துருக்கோம். எல்லா தகுதியும் இருந்தும் அவங்களைவிட நாங்க குறைவான சம்பளத்தை வாங்குறதுக்கு என்ன காரணம். இதுமட்டுமில்லீங்க, கடந்த10 வருஷங்களாக துப்புரவுப் பணியாளர்களுக்குக் கொடுக்கிற அதே ஊதியத்தை ஆசிரியர்களான எங்களுக்கும் கொடுத்துட்டு வர்றாங்க. என்ன நியாயம் இது. அதனால்தான், இன்னிக்கு துப்புரவுப் போராட்டம் நடத்திக்கிட்டு இருக்கோம். 

போராட்டம்

எங்க கோரிக்கையில் நியாயம் இருக்கிறதாலதான் எங்கக் குழந்தைகளையும் எங்ககூட வைச்சுக்கிட்டு போராடுறோம். ஆனா, இது பனிக்காலம்கிறதால எங்க குழந்தைங்க எல்லாம் இருமல், ஜலதோஷம்னு கஷ்டப்படுறாங்க. கொசுக்கடியும் தாங்க முடியலை. கிட்டத்தட்ட 2,000 பெண் ஆசிரியர்கள் போராடிக்கிட்டு இருக்கோம். ஆனா, இங்கே இரண்டு பாத்ரூம்தான் இருக்கு. தலைக்கு மேலே கொட்டற பனி, எங்ககூட அவதிப்பட்டுக்கிட்டிருக்கிற குழந்தைங்க, இதோட பெண்களுக்குன்னு வர்ற மாதாந்திரப் பிரச்னைகள்னு எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டு போராடிக்கிட்டிருக்கோம். அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு கூப்பிடுறாங்க. வெறும் வாய்மொழியில் எங்க கோரிக்கையை நிறைவேற்றுகிறோம்னு சொல்றாங்க. இதுவரை இரண்டு தடவை அவங்க சொன்னதை நம்பிப் போனோம். எந்தத் தீர்வும் எங்களுக்கு கிடைக்கலை. எங்க சம்பள விஷயத்துல அரசு ஆணைக் கொடுக்கிற வரைக்கும் தொடர்ந்து எங்க போராட்டத்தை நடத்துவோம்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க