வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (28/12/2018)

கடைசி தொடர்பு:14:45 (28/12/2018)

ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார் `மாவோயிஸ்ட்' பத்மா!

தீவிர இதயத்துடிப்பு நோய் காரணமாக அவதிப்பட்டு வந்த மாவோயிஸ்ட் பத்மாவை ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

2002-ம் ஆண்டு ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாக பத்மாவைக்  க்யூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர். கடந்த பத்து ஆண்டுகளாக இதயக் கோளாறு பாதிப்பில் இருந்துவந்த பத்மா, சிறையில் அடைக்கப்பட்ட பிறகு ‘தீவிர இதயத்துடிப்பு’ பிரச்னையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார். பிணையில் வெளிவந்த பத்மா தலைமறைவானார். நோயின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்தார். 

மாவோயிஸ்ட் பத்மா


புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பத்மாவுக்கு நெஞ்சுவலி அதிகரித்ததைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சைக் கொடுக்கப்படவில்லை என்று உறவினர்கள் கூறிவந்தனர். அதற்கேற்றார்போல், அவரைப் புழலுக்கும் மருத்துவமனைக்கும் மாற்றிமாற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர் போலீஸார். இந்த நிலையில், பத்மாவுக்கு உரிய சிகிச்சைக் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பத்மாவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பாமல், சிறப்பு வசதிகள் கொண்ட ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். விரைவில், சிகிச்சைக்காக பத்மா ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவுள்ளார்.