‘11 ஆடுகளைக் கடித்துக் கொன்ற சிறுத்தை!’ - பீதியில் வாணியம்பாடி மக்கள் | 'The leopard that bites the sheep!' - Vaniyampadi people panic

வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (28/12/2018)

கடைசி தொடர்பு:15:20 (28/12/2018)

‘11 ஆடுகளைக் கடித்துக் கொன்ற சிறுத்தை!’ - பீதியில் வாணியம்பாடி மக்கள்

வாணியம்பாடியில் பொதுமக்களைத் தாக்கிய சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மற்றொரு கிராமத்தில் புகுந்த இன்னொரு சிறுத்தை, 11 ஆடுகளைக் கடித்துக் கொன்றுள்ளது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

வாணியம்பாடி

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் நேற்று முன்தினம் கன்றுக்குட்டியின் வயிற்றைக் கிழித்து சிறுத்தை கடித்துக் கொன்றது. இதைத்தொடர்ந்து, வாணியம்பாடி அடுத்த நாகலேரி வட்டம் சிக்கனாங்குப்பம் ஏரிக்கரையில் நேற்று பதுங்கியிருந்த வேறொரு சிறுத்தை, பெண் உட்பட 3 பேரை தாக்கியது. இதில் அவர்கள் காயமடைந்தனர். கரும்புத் தோட்டத்தில் பதுங்கிய அந்த சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் முயன்றனர். அப்போது, கரும்புத் தோட்டத்திலிருந்து வெளியே பாய்ந்து வந்த சிறுத்தை, அங்கு சூழ்ந்திருந்த 300-க்கும் மேற்பட்டோரைத் துரத்தியது. ஒருவர் கடிபட்டார். வனத்துறையினரிடம் சிக்காமல் சிறுத்தை தப்பி ஓடிவிட்டது.

சிறுத்தை
 

சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் இரவு, பகலாகத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை பதுங்கியிருந்த சிக்கனாங்குப்பம் ஏரிக்கரை உட்பட மூன்று இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்தக் கூண்டுகளில் ஆட்டிறைச்சி தொங்கவிடப்பட்டுள்ளன. ‘இறைச்சி வாடையில் சிறுத்தை எப்போது வேண்டுமானால் அங்கு மீண்டும் வரலாம்’ என்பதால் சிக்கனாங்குப்பம் உட்பட அதனைச் சுற்றியுள்ள 5 கிராமங்களில் ஒலிபெருக்கி மூலம் போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர். ‘சிறுத்தையைப் பிடிக்கும் வரை... கிராம மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். வீதியில் நடமாட வேண்டாம்’ என்று அறிவுறுத்தப்பட்டனர்.

சிறுத்தை

சிறுத்தையின் கால்தடங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடிக்க வனக்குழு தயாராக இருக்கிறது. சிறுத்தையின் அட்டகாசத்தால், சிக்கனாங்குப்பம் உட்பட்ட 5 கிராம மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் தவித்தனர். அத்தியாவசிய பொருள்களை கடைகளுக்குச் சென்று வாங்க முடியாமல் அவதிப்பட்டனர். ஆடு, மாடு, கோழிகளைப் பாதுகாக்க கட்டை போன்ற ஆயுதங்களைக் கையில் வைத்துக் காவல் காத்து வருகின்றனர். இளைஞர்கள் ஏராளமானோர், வனத்துறையினருக்கு உதவியாகச் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுத்தை

இதனிடையே, வாணியம்பாடி அடுத்த அலசந்தாபுரம் சிமுக்கம்பட்டு என்கிற கிராமத்தில் சேகர் என்பவரின் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 11 ஆடுகளைச் சிறுத்தை கொடூரமாகத் தாக்கி கடித்துக் கொன்றுள்ளது. மேலும், பல ஆடுகளையும் சிறுத்தை தாக்கியதால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. இதுபற்றி தகவலறிந்து வந்த வனத்துறையினர், ஆடுகளை வேட்டையாடிக் கொன்ற விலங்கின் காலடி தடத்தைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், சிறுத்தை என்பதை உறுதிப்படுத்தினர். ``மூன்று இடங்களில் சிறுத்தை தாக்குதல் நடந்திருப்பதால், வனப்பகுதியிலிருந்து சிறுத்தைகள் கூட்டமாக வெளியே வந்திருக்கலாம். தனித்தனியாகப் பிரிந்து பல்வேறு கிராமங்களுக்குள் புகுந்து பதுங்கியிருக்கலாம். கண்ணில் பட்டதை கடித்துக் கொல்வதால், பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்’’ என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். 

சிறுத்தை