சாத்தூர் கர்ப்பிணிப் பெண் விவகாரம்! - சிவகாசி அரசு மருத்துவமனையில் விசாரணைக் குழு ஆய்வு | Enquiry at sivakasi government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (28/12/2018)

கடைசி தொடர்பு:15:40 (28/12/2018)

சாத்தூர் கர்ப்பிணிப் பெண் விவகாரம்! - சிவகாசி அரசு மருத்துவமனையில் விசாரணைக் குழு ஆய்வு

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவினர் சிவகாசி அரசு மருத்துவமனையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கான மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் எஸ்.மாதவி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நியமித்துள்ளார்.

இந்தக் குழுவில் எஸ்.மாதவி, சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் ரகுநந்தன், யூப்ரிசாலதா, சுதந்திரன் அம்சவர்த்தினி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மணிமாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் இன்று காலை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். விருதுநகர் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் இரா.மனோகரன், ரத்த வங்கி பொறுப்பாளர் சைலேஷ்குமார், கணேஷ்பாபு ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவ அலுவலர் திருமுருகானந்த், செவிலியர்கள் கலாவதி, அஜிதா, பாக்யலட்சுமி,, நம்பிக்கை மைய ஆலோசகர் முருகேசன் ஆகியோரிடம் இந்த விசாரணை நடைபெற உள்ளது.

மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் நியமனம் செய்த மருந்தக ஆய்வாளர் தலைமையிலான குழுவினர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.