புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாமல்லபுரம் வரவேண்டாம்-காவல்துறை ரெட் அலர்ட்! | People shall not visit Mamallapuram for New Year celebrations!

வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (28/12/2018)

கடைசி தொடர்பு:16:21 (28/12/2018)

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாமல்லபுரம் வரவேண்டாம்-காவல்துறை ரெட் அலர்ட்!

புத்தாண்டு தினத்தில் எந்த மகிழ்ச்சிக்கு மாமல்லபுரம் வருகிறார்களோ, அதை அனுபவிக்காமலேயே அவர்கள் திரும்பிச் சென்று விடுவார்கள். இதுபோன்ற கொண்டாட்டங்களுக்கு இப்போதெல்லாம் ஆண்களை விட பெண்கள் வேகமாக இருக்கிறார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாமல்லபுரம் வரவேண்டாம்-காவல்துறை ரெட் அலர்ட்!

ங்கிலப் புத்தாண்டு என்றாலே இளைஞர்களுக்குக் கொண்டாட்டம்தான். டிசம்பர் 31-ம் தேதி இரவு தொடங்கி விடியவிடிய நண்பர்களுடன் கொண்டாட்டங்கள் களைகட்டும். சென்னை இளைஞர்களின் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள், பெரும்பாலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில்தான் இருக்கும். மின்னல் வேகத்தில் பைக் ரேஸ், ஒரு பைக்கில் 4 பேர் செல்வது, மது குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது, சாலைகளில் பாட்டில்களை உடைப்பது, கண்ணில் தென்படும் பெண்களைக் கட்டிப்பிடித்து வாழ்த்துச் சொல்வது இப்படியான கொண்டாட்டங்களையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பார்க்கலாம். மாமல்லபுரம் பகுதிகளில் உள்ள ரிசார்ட்டுகளில் கேளிக்கை நிகழ்ச்சிகள், மது விருந்துகள் என இரவு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறும். போதையில் இருக்கும் சில இளைஞர்கள், வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைக் கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவிப்பார்கள். அந்த நாளில் காவல்துறையினருக்குப் பாதுகாப்புப் பணி என்பது சவால் நிறைந்ததாகவே இருக்கும். கொண்டாட்டம் என்ற பெயரில் எல்லை மீறும் இளைஞர்களுக்குத் தமிழகக் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

மாமல்லபுரம்

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்பாராஜூ தலைமையில் நடந்த மீட்டிங்கில் மாமல்லபுரம் ரிசார்ட் உரிமையாளர்கள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். அப்போது புத்தாண்டு தினத்தன்று ரிசார்ட் மற்றும் ஹோட்டல்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்பற்றாதவர்கள் மீது `கடுமையான சட்டப் பிரிவு’களின் கீழ் வழக்குத் தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தனர். காவல்துறையின் கெடுபிடியால் கொண்டாட்டங்களைக் குறைத்துக் கொண்டால் வருமானமும் குறைந்து போய்விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள் மாமல்லபுரம் விடுதி உரிமையாளர்கள்.

மாமல்லபுரம் டி.எஸ்.பி சுப்பாராஜூ-விடம் பேசினோம். ``ரிசார்ட் உரிமையாளர்கள், புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்குக் காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும். ஹோட்டல்களில் டி.ஜே புரோகிராம் வைத்திருப்பவர்கள், பார்களில் மட்டுமே மது அருந்த அனுமதிக்க வேண்டும். பாரைத் தவிர மற்ற இடங்களில் மது அருந்த அனுமதி கிடையாது. சரியாக 11 மணிக்கு பார் மூடப்பட வேண்டும். சொந்த வாகனங்களில் குடிக்க வரும் நபர்கள், குடித்திருந்தால், அவர்களை ஹோட்டல் நிர்வாகம் தங்களுடைய டிரைவர்களைக் கொண்டு பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் சென்று விடவேண்டும். இதற்காக டிரைவர்களை ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும். கண்ட இடங்களில் பார்க்கிங் செய்யக் கூடாது. பீச் ரிசார்ட் வைத்திருப்பவர்கள் நீச்சல் தெரிந்த ஆட்களை பணியில் பாதுகாப்புக்கு நியமித்திருக்க வேண்டும். லைஃப் ஜாக்கெட் வைத்திருக்க வேண்டும். கடலில் குளிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. 31-ம் தேதி இரவு 7 மணிக்குப் பிறகு, நீச்சல் குளத்தில் குளிக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. அடையாள அட்டை கொண்டு வருபவர்களை மட்டுமே ரிசார்ட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். நள்ளிரவு 12 மணிக்குக் கொண்டாட்டம் தொடங்கினால் 12.30க்கு மேல் கொண்டாட்டங்களை முடித்துவிட வேண்டும்.

பைக் ரேஸ்

விதிகளை மீறும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள். பழைய மாமல்லபுரம் சாலை, கேளம்பாக்கத்தில் வண்டலூர் ஜங்ஷன், நாவலூர் ஜங்ஷன், மாம்பாக்கம் ஜங்ஷன், திருப்போரூர் ரவுண்டானா, பூஞ்சேரி ஜங்ஷன், கிழக்குக் கடற்கரை சாலை, தாழம்பூர், நாவலூர் சிக்னல்,  முட்டுக்காடு பாலம், வெங்கம்பாக்கம் ஜங்ஷன், வாயலூர் ஜங்ஷன் உள்ளிட்ட பல இடங்களில் தடுப்புகள் அமைத்து வாகன சோதனை செய்யப்படும். குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதியப்படும். வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட பிறகு மறுநாள் வந்து ஆவணங்களைக் கொடுத்துவிட்டு, நீதிமன்றத்தில் அபராதம் செலுத்திய பிறகுதான் வாகனங்களைக் கொடுப்போம். கடற்கரைப் பகுதியில் ரேஸுக்கு அனுமதி கிடையாது. மாமல்லபுரம் பகுதியில் உள்ளவர்கள் மட்டும்தான் மாமல்லபுரத்துக்கு வரமுடியும். சென்னையில் கட்டுப்பாடுகள் இருக்கிறது என மாமல்லபுரத்துக்கு வருபவர்களைத் திருப்பி அனுப்பி விடுவோம். விபத்துகளே இல்லாத அளவுக்கு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தியிருக்கிறோம். கடற்கரையில் மணலில் செல்லும் போலரிஸ் வாகனங்களை வைத்து கோவளத்திலிருந்து மாமல்லபுரம் வரை கண்காணிக்க ஏற்பாடு செய்துள்ளோம்” என எச்சரித்தார்.

இதுகுறித்து மாமல்லபுரம் உணவு மற்றும் தங்கும் விடுதிகள் சங்கத் தலைவர் ஜெனார்த்தனர், ``புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது, இளைஞர்கள் குடிபோதையில் பொதுமக்களுக்கு எவ்வித தொந்தரவும் செய்யக் கூடாது எனக் காவல்துறையினர் நினைக்கிறார்கள். அவர்களின் கட்டுப்பாடுகளை நாங்கள் வரவேற்கிறோம். சென்னையிலிருந்து மாமல்லபுரம் வருபவர்களைக் கோவளத்திலேயே திருப்பி அனுப்பிவிடுவார்கள். எந்த மகிழ்ச்சிக்கு வருகிறார்களோ, அதை அனுபவிக்காமலேயே திரும்பிச் சென்று விடுவார்கள். நள்ளிரவில் நடக்கும் மதுவிருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகள் போன்ற கொண்டாட்டங்களுக்கு இப்போதெல்லாம் ஆண்களை விடப் பெண்களே அதிகளவில் தயாராக இருக்கிறார்கள். காவல்துறையினரைப் பொறுத்தவரை கெடுபிடியாக இருப்பதாகச் சொல்வார்களே தவிர, அப்படியெல்லாம் அதீத கெடுபிடியாக இருக்கமாட்டார்கள்.” என்கிறார்.

பிறரைத் துன்புறுத்தாமல் மகிழ்ச்சி அடைவதே உண்மையான மகிழ்ச்சி. இளைஞர்கள் இதை உணர வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்