நம்மாழ்வார் நினைவு தினத்தில் இயற்கை விவசாயக் கருத்தரங்கு! | nammalvar memorial day special seminar on organic farming

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (28/12/2018)

கடைசி தொடர்பு:17:20 (28/12/2018)

நம்மாழ்வார் நினைவு தினத்தில் இயற்கை விவசாயக் கருத்தரங்கு!

`இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார் முன்னெடுத்த செலவு குறைந்த இயற்கை இடுபொருள்களான அமுதக்கரைசல், பஞ்சகவ்யா, மூடாக்கு, உழவு முறைகள் ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் `இனியெல்லாம் இயற்கையே' என்ற பெயரில் சேலத்தை அடுத்த பூசாரிப்பட்டியில் இயற்கை விவசாயக் கருத்தரங்கு நடைபெற உள்ளது. இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவைப் போற்றும் வகையில் நடைபெறும் இக்கருத்தரங்கு தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறை மற்றும் பசுமை விகடன் இணைந்து நடத்துகின்றன. 

இயற்கை

வருகிற ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 30-ம் தேதி), பூசாரிப்பட்டியில் உள்ள சீனிவாசா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் இலவசமாகவே இயற்கை விவசாயம் செய்ய வழிகாட்டும் அரசுத் திட்டமான பாரம்பர்ய வேளாண் வளர்ச்சித் திட்டம் பற்றிப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை வேளாண் துறை அதிகாரிகள் வழங்கவுள்ளனர். அதேசமயம் இந்தத் திட்டத்தில் பலன்பெற்ற விவசாயிகளும் தங்களுடைய வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள உள்ளனர். செலவு குறைந்த இயற்கை இடுபொருள் தயாரிப்புக்கான பயிற்சியும் வழங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சியை சேலம் மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயி அபிநவம் ஜெயராமன் பயிற்சி அளிக்க உள்ளார். 

மேலும், வீட்டுக்குள் விவசாயம் என்ற தலைப்பில் சேலத்தைச் சேர்ந்த அல்லி ஆரண்யா பயிற்சி அளிக்கவுள்ளார். தன்னுடைய வீட்டில் தோட்டம் அமைத்துப் பாதுகாத்து வரும் இவர் தன்னுடைய அனுபவங்களை முழுமையாகப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். மலர் சாகுபடி குறித்து தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடாசலம் பேச இருக்கிறார். இவர் சம்பங்கி, சாமந்தி ஆகிய மலர் வகைகளைச் சாகுபடி செய்து வருகிறார். இவர் தன்னுடைய அனுபவங்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள இருக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்தக் கருத்தரங்கில் விவசாயத்துக்குப் பயன்படும் பல பயனுள்ள விஷயங்களை வல்லுநர்கள் பேச இருக்கிறார்கள். அனைவரும் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். அனுமதி இலவசம். 
முன்பதிவுக்கு, செல்போன்: 99400 22128 

நீங்க எப்படி பீல் பண்றீங்க