`நான் எதாவது சொன்னால் சின்னப் பையன் என்பார்கள்!'- தி.மு.க, அ.தி.மு.க-வைச் சாடும் விஜய பிரபாகரன் | Prabhakaran Vijayakanth slams DMK and ADMK

வெளியிடப்பட்ட நேரம்: 16:37 (28/12/2018)

கடைசி தொடர்பு:16:37 (28/12/2018)

`நான் எதாவது சொன்னால் சின்னப் பையன் என்பார்கள்!'- தி.மு.க, அ.தி.மு.க-வைச் சாடும் விஜய பிரபாகரன்

`அ.தி.மு.க மற்றும் தி.மு.க மாறி மாறி ஆட்சிக்கு வந்தாலும், இதுவரை எதுவுமே அவர்கள் செய்யவில்லை’ என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் விமர்சித்துள்ளார். 

பிரபாகரன்
 

தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் உடல் நிலை சரியில்லாததால் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக அரசியலில் பரபரப்பாக இயங்குவதில்லை. அவரது மனைவி பிரேமலதா கட்சியை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கிறார். தற்போது விஜயகாந்த்தை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்தின் மூத்த மகன் சினிமாவில் பிஸி. இளைய மகன் பிரபாகரன் அவ்வபோது விஜயகாந்துக்குப் பதில் முக்கியக் கூட்டங்களில் பங்குபெற்று வருகிறார். அப்படியாக இன்று சென்னை நுங்கம்பாக்கம், பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களை பிரபாகரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களிடம் உரையாடி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். ஆசிரியர்களின் கோரிக்கைகளை தே.மு.தி.க சார்பில் எடுத்துரைக்கப்படும் என்றும் இடைநிலை ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுப்போம் என்றும் உறுதியளித்தார்.

பிரபாகரன்
 

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த பிரபாகரன், ``ஆசிரியர்களின் சம்பளம் குறித்த கோரிக்கையை நிறைவேற்றினால் அவர்கள் வரும் புத்தாண்டை மகிழ்ச்சியாகக் கொண்டாடுவார்கள். `சம வேலை சம ஊதியம்’ இதுவே ஆசிரியர்களின் கோரிக்கையாக உள்ளது. நம் நாட்டுக்கு ஆசிரியர்கள் மிகவும் முக்கியமானவர்கள். அவர்களின் கோரிக்கையை இந்த அரசு பரிசீலனை செய்ய வேண்டும். எல்லோரையும் முன்னேற்றிவிடும் ஆசிரியர்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கையில், நாம் மட்டும் நிம்மதியான புத்தாண்டு கொண்டாடுவது நல்லதல்ல.

போராட்டத்தில் ஈடுபட்ட 88 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். நான் சின்ன வயதிலிருந்தே பார்க்கிறேன். எப்போதுமே ஆசிரியர்கள் போராட்டம் போராட்டம் என்று செய்திகள் வந்துகொண்டிருக்கும். அ.தி.மு.க, தி.மு.க மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவிட்டது. ஆனாலும் ஆசிரியர்கள் பிரச்னையில் எதுவுமே மாறவில்லை. இந்த இடத்துக்கு நான் பள்ளிப் புத்தகங்கள் வாங்க வந்திருக்கிறேன். ஆனால் இப்போது இங்கு ஆசிரியர்கள் போராட்டத்தைப் பார்க்கிறேன். இதைப் பார்க்கும்போது கஷ்டமாக இருக்கிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில்தான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் குறைவு என்கிறார்கள். ஆனால், கல்வியில் தமிழகம் முன்னணியில் உள்ளது. இதற்குக் காரணம் ஆசிரியர்களின் உழைப்புதான். அந்த உழைப்புக்கான சம்பளத்தை அவர்கள் கேட்கிறார்கள்’ என்றார்.

பிரபாகரன்
 

அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதா என்று செய்தியாளர்கள் பிரபாகரனிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், `கண்டிப்பாகப் பின்னுக்குத் தள்ளப்பட்டிருக்கு. நேற்றுதான் நான் ஆந்திராவிலிருந்து சென்னை வந்தேன். அங்கு அனைவரும் எல்லாத் துறைகளிலும் தொலைநோக்குப் பார்வையோடு இருக்கிறார்கள். நாம் ஏன் அப்படியில்லை’ என்றார்.

இதைத் தொடர்ந்து `இந்த ஒட்டுமொத்தப் பிரச்னைகளுக்கும் என்ன தீர்வு’ என்று பிரபாகரனிடம் கேள்வி எழுப்பினர். 
`நான் எதாவது சொன்னால் ``சின்ன பையன், புது பையன்” என்று சொல்வார்கள். எனவே இத்தனை காலம் தமிழகத்தை ஆட்சி செய்தவர்களிடம் போய் கேளுங்கள். இவ்வளவு வருஷம் இரண்டு கட்சிகளும் எதுவுமே செய்யவில்லை. அ.தி.மு.க, தி.மு.க மாறி மாறி ஆட்சிக்கு வந்து ஒரே தப்பைதான் செய்கிறார்கள். இதற்கு ஒரே தீர்வு ஆட்சி மாற்றம்’ என்றார் காட்டமாக. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க