வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (28/12/2018)

கடைசி தொடர்பு:19:40 (28/12/2018)

தடுத்து நிறுத்திய காவல்துறையினர்..! - போராட்டக் களத்துக்கு ஊர்வலமாகச் சென்ற கம்யூனிஸ்ட்கள்

மத்திய அரசு விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்தக் கோபுரங்களை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொங்கு மண்டல விவசாயிகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள். திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர் எனப் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகளை திரட்டி கடந்த 10 நாள்களுக்கும் மேலாகக் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விவசாய நிலங்களைத் தவிர்த்துவிட்டு, சாலையோரங்களில் கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் கள்ளிபாளையத்தில் தற்போது 12-வது நாளாகக் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கடந்த 6 நாள்களாக தொடர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள் விவசாயிகள்.

போராட்டம்

இந்தநிலையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைச் சந்திப்பதற்காக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று பல்லடம் வந்திருந்தார். அவரை தண்ணீர்ப் பந்தல் என்ற பகுதியில் வைத்துத் தடுத்து நிறுத்தினார்கள் காவல்துறையினர். இதனால் காவல்துறைக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினருக்குமிடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து தன்னுடைய காரிலிருந்து இறங்கிய மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வரும் கள்ளிப்பாளையம் போராட்டக் களம் வரை சக தோழர்களுடன் ஊர்வலமாகச் சென்றார். 

அங்கு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்துவிட்டுப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன், ``விவசாய நிலங்கள் வழியே மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இத்திட்டத்தை ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு திட்டத்தைச் செயல்படுத்த அவசரம் காட்டிவருகிறது. போராட்டத்துக்குத் தீர்வு காண வேண்டிய அரசே, போராட்டத்தை முடக்கவும், போராடுபவர்களுக்கு ஆதரவு தர வருபவர்களை தடுத்து நிறுத்திக் கைது செய்வது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகிறது. வரும் ஜனவரியில் சட்டப்பேரவை கூடவிருக்கும் நிலையில் அவற்றை அமைதியாக நடத்துவதற்கு முதல்வர் விரும்பவில்லை போல' எனத் தெரிவித்துவிட்டுச் சென்றார்.

கம்யூனிஸ்ட்

இதே போன்று கோவை சுல்தான்பேட்டையில் 12-வது நாளாக இன்றும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. விவசாயிகளுக்குத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், விவசாயிகளைச் சந்திப்பதற்காக சுல்தான்பேட்டை வந்திருந்தார். போராட்டக் களத்தைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, பாலகிருஷ்ணன் மற்றும் கம்யூனிஸ்ட் தொண்டர்களுக்கு போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், கம்யூனிஸ்ட்களுக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இது தள்ளு முள்ளு வரை செல்லவே, போலீஸ் தடையையும் மீறிச் சென்று பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் விவசாயிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். எப்போது வேண்டுமானாலும் விவசாயிகளை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சுல்தான்பேட்டை போராட்டக்களம் பதற்றத்துடன் காணப்படுகிறது.