50,000 ஏக்கர் மக்காச்சோளத்தை அழித்த படைப்புழு! - நிவாரணம் கேட்டு போராடும் மார்க்ஸிஸ்ட் | Nellai Maize farmers demands compensation after loss their crop with reduviid bug attack

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (28/12/2018)

கடைசி தொடர்பு:20:00 (28/12/2018)

50,000 ஏக்கர் மக்காச்சோளத்தை அழித்த படைப்புழு! - நிவாரணம் கேட்டு போராடும் மார்க்ஸிஸ்ட்

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவில் 50,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பயிர், படைப்புழுத் தாக்குதலால் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அதனால், விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மக்காச்சோளத்துக் நிவாரணம் கோரி மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் தாலுகாவில் உள்ள விவசாயிகள், 50,000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிர் செய்துள்ளனர். இந்த ஆண்டு பெய்த பருவமழை காரணமாகப் பயிர்கள் சிறப்பாக வளர்ந்து நல்ல மகசூல் வந்திருக்கிறது. இந்த நிலையில், மக்காச்சோளம் பயிரில் இந்த ஆண்டு படைப்புழுத் தாக்குதல் அதிகரித்துள்ளது. கூட்டமாக வரக்கூடிய இந்த புழுக்கள் பயிர்களில் உள்ள மகசூல் முழுவதையும் மேய்ந்துவிடுவதால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறார்கள்.

படைப்புழுக்களில் தாக்குதல் காரணமாக அந்தப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளப் பயிரில் 70 சதவிகிதம் பயிர்கள் சேதமடைந்துள்ளன, பழங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் திருவேங்கடம் மற்றும் கரிசல்குளம் பகுதிக்கு உட்பட்ட கிராமங்களிலும் மக்காச்சோளப் பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அதனால் விவசாயிகளுக்குப் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

போதிய மழை இல்லாமலும், படைப்புழுக்கள் தாக்கம் காரணமாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 25,000 ரூபாய் நிவாரண தொகையை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்றும் மக்காச்சோளப் பயிருக்கு இன்ஷுரன்ஸ் பதிவு இல்லாத வருவாய் கிராமங்களை உடனடியாக இன்ஷுரன்ஸ் பதிவு கொண்ட பகுதிகளாக மாற்றி, அந்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும் இன்ஷுரன்ஸ் பிரிமியம் செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்ஸிஸ்ட் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

வட்டாச்சியரிடம் மார்க்சிஸ்ட் மனு அளித்தனர்

திருவேங்கடம் தாலுகா அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்ஸிஸ்ட் கட்சியின் திருவேங்கடம் தாலுகா செயலாளர் எஸ்.வேணுகோபால் தலைமை வகித்தார். நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எம்.எஸ்.நல்லசாமி, எஸ்.கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.