`விளை நிலங்களில் புகுந்த அரக்கனை விரட்டியடித்த விவசாயிகள்’ - தொடரும் நூதனப் போராட்டம் | Farmers protest at tirupur

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (28/12/2018)

கடைசி தொடர்பு:21:00 (28/12/2018)

`விளை நிலங்களில் புகுந்த அரக்கனை விரட்டியடித்த விவசாயிகள்’ - தொடரும் நூதனப் போராட்டம்

விவசாய விளை நிலங்கள் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்து திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நடத்தி வரும் காத்திருப்புப் போராட்டத்தில் அரக்கனை விரட்டியடிப்பதுபோல காட்சிகள் அமைத்துப் போராடி வருகிறார்கள் விவசாயிகள்.

மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் சார்பில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால் திருப்பூர் கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்ட விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த உயர் மின் கோபுரத் திட்டத்தை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக மற்ற மாநிலங்களில் பின்பற்றப்படுவதைப்போல நிலத்துக்கு அடியில் கேபிள் மூலமாக மின்சாரத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் விவசாயிகளின் இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்காமல், மின் கோபுரங்கள் அமைக்க விளை நிலங்களை கையகப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்தி வருகிறது அரசு. எனவே, தங்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசைக் கண்டித்தும், விளை நிலங்களில் மின் கோபுரங்கள் அமையவிருப்பதற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும் திருப்பூர் மாவட்ட விவசாயிகள் கடந்த டிசம்பர் 17-ம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினார்கள்.

திருப்பூர் மாவட்டம் கள்ளிப்பாளையத்தில் கடந்த 12 நாள்களாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போராட்டம் தொடக்கத்தில் காத்திருப்புப் போராட்டமாகத் தொடங்கினாலும், தற்போது தொடர் உண்ணாவிரதப் போராட்டமாக உருவெடுத்துள்ளது. கடந்த சில நாள்களாகப் போராட்டப் பந்தலில் உண்ணாவிரதம் இருந்துவரும் விவசாயிகளில் இதுவரைக்கும் 6 பேர்வரை உடல்நிலை மோசமடைந்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் நூதனமான முறையில் போராட்டக் காட்சிகளை மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து அரங்கேற்றிக்கொண்டே இருக்கிறார்கள் விவசாயிகள்.

மாதிரி உயர் மின்கோபுரத்தை பாடையில் கட்டி சங்கு ஊதி ஊர்வலமாக எடுத்துச் செல்வது, தென்னை மரங்களுக்கு ஒப்பாரி வைப்பது, கழுதையிடம் மனு அளிப்பது எனப் பல்வேறு போராட்டங்களை நடத்திய விவசாயிகள், இன்றைய போராட்டத்தில் விவசாய நிலங்களுக்குள் புகுந்த அரக்கனை விவசாயிகள் ஒன்றிணைந்து விரட்டியடிப்பதுபோல காட்சிகளை அமைத்துப் போராடி வருகிறார்கள். மேலும், இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தையும் முற்றிலுமாகப் புறக்கணித்து தங்களின் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளைப் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேரில் சந்தித்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.