`முத்தலாக் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!’ - நல்லகண்ணு | central government should reconsider the triple talaq bill says Nallakannu

வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (28/12/2018)

கடைசி தொடர்பு:22:00 (28/12/2018)

`முத்தலாக் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!’ - நல்லகண்ணு

குறிப்பிட்ட மதத்தைப் பழிவாங்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார். அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காத ஆட்சி மத்தியில் நடந்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

நல்லகண்ணு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மற்றும் பெரியார் விழாக்குழு சார்பாக தந்தை பெரியார் 140-வது ஆண்டு விழா நெல்லையில் இன்று தொடங்கியது. இரண்டு நாள்கள் நடக்கும் இந்த விழாவையொட்டி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தலைமையில் திரைப்பட எடிட்டர் லெனின், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் உள்ளிட்ட பலரும் பாளையங்கோட்டையில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்லகண்ணு, ``பெரியார், பகுத்தறிவுவாதியாக, சுயமரியாதை இயக்கவாதியாகத் திகழ்ந்தவர். சாதி, மத ஒழிப்புக்காகப் போராட்டங்களை நடத்தியவர், அவரின் கருத்துகள்தான் நமக்கு இப்போது வழிகாட்டியாக இருக்கிறது. அவரது கருத்துகளைப் பரப்புரை செய்வது அவசியமாக உள்ளது, அப்படிப்பட்டவரின் விழாவைக் கொண்டாடுவது மகிழ்ச்சியளிக்கிறது.  

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி நோய்த் தொற்றுக் கொண்ட ரத்தம் ஏற்றப்பட்டது என்பது மருத்துவத்துறையின் தவறு. அதனால் மருத்துவர்கள் நியாயமாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும். இந்தச் செயல் மருத்துவத்துறை மற்றும் தமிழக அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது. போக்குவரத்து விரிவாக்கம் என்கிற பெயரில் எட்டு வழிச்சாலை மற்றும் நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக விவசாய நிலம் கையகப்படுத்தப்படுவது வருத்தம் அளிக்கிறது. 

பெரியார் 140 விழா

சாலைகளுக்காகக் கிராமங்கள் அழிக்கப்படுகின்றன; முன்னறிவிப்பு இல்லாமலும் மக்களின் கருத்துக் கேட்காமலும் சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படுகிறது. மக்களின் கருத்துகளைக் கேட்காமலும் சட்ட விதிமுறைகளை மதிக்காமலும் மத்திய, மாநில அரசுகள் செயல்படுகின்றன. சாலை அமைப்பது தொடர்பாக மக்களின் கருத்துகளைக் கேட்க வேண்டும். சாலை விரிவாக்கம் என்ற பெயரில் மக்களின் வாழ்வை அரசாங்கமே அழிக்கக் கூடாது. 

குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பழிவாங்கும் வகையில், நாடாளுமன்றத்தில் முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது, அதை மறுபரிசீலனை செய்யவேண்டும். அதற்கு எதிர்ப்புக் குரல்கள் எழுப்பிய நிலையிலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற விவகாரங்களில் அனைத்துக் கட்சிகளின் கருத்துகளையும் கேட்டு ஆலோசனை நடத்தி உரிய முடிவுகளை எடுக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தையே மதிக்காத ஆட்சிதான் மத்தியில் நடந்துகொண்டு இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.