சிவகாசி அரசு மருத்துவமனையில் 6 மணி நேரம் விசாரணை | 6 hours enquiry in sivakasi gh

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (28/12/2018)

கடைசி தொடர்பு:23:00 (28/12/2018)

சிவகாசி அரசு மருத்துவமனையில் 6 மணி நேரம் விசாரணை

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட குழுவினர் சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் எஸ்.மாதவி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு டிசம்பர் 3-ம் தேதி ஹெச்.ஐ.வி பாதித்தவரின் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால் அந்தப் பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள், சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் மீது 269, 338 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை நடத்திய குழுவினர்

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் எஸ்.மாதவி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவை, தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் நியமித்துள்ளார். இந்தக் குழுவில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கூடுதல் இயக்குநர் எஸ்.மாதவி, சென்னை மருத்துவக் கல்லூரி பேராசிரியர்கள் ரகுநந்தன், யூப்ரிசாலதா, சுதந்திரன் அம்சவர்த்தினி திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மணிமாலா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

விருதுநகர் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் இரா.மனோகரன், ரத்த வங்கிப் பொறுப்பாளர் சைலேஷ்குமார், ஆய்வக நுட்பனர் கணேஷ்பாபு, நிலைய மருத்துவ அலுவலர் திருமுருகானந்த், செவிலியர்கள் கலாவதி, அஜிதா, பாக்யலட்சுமி,, நம்பிக்கை மைய ஆலோசகர் முருகேசன் ஆகியோர் இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்தக் குழு இன்று (டிசம்பர் 28) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை விசாரணை நடத்தியது.

ரத்த வங்கி

அதன் பின்னர், அங்குள்ள ரத்தவங்கி, மகப்பேறு பிரிவு உள்ளிட்ட இடங்களில் இந்தக் குழு ஆய்வு செய்தது. விசாரணை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தற்போது விசாரணை நடைபெற்று வருவதால் இதுசம்பந்தமாக எதுவும் கூற முடியாது. யார் யாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் கூற முடியாது. முழுமையாக விசாரணை முடிந்த பின் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என குழுவின் தலைவர் எஸ்.மாதவி தெரிவித்தார்.