வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (28/12/2018)

கடைசி தொடர்பு:23:30 (28/12/2018)

`20 நாள்களில் 60 திருட்டு செல்போன்கள் கண்டுபிடிப்பு!’ - தஞ்சை போலீஸார் நடவடிக்கை

தஞ்சாவூரில் தொடர்ந்து செல்போன்கள்  திருடப்பட்டு வந்ததால் இது குறித்து புகார்கள் அதிகமாக வந்தன. இதனையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் 20 நாளில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 60 ஆன்ட்ராய்டு செல்போன்களை சைபர் கிரைம் போலீஸார் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர். செல்போனைப் பெற்று கொண்டவர்கள் போலீசாரை மனதார பாரட்டி விட்டு சென்றனர்.

செல்போன் ஒப்படைப்பு

தஞ்சாவூரில் பல்வேறு இடங்களில் பொதுமக்களிடம் தொடர்ந்து பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆண்ட்ராய்டு செல்போன்களை மர்ம நபர்கள் திருடி வந்தனர். இதுதொடர்பாக  தஞ்சையில் உள்ள காவல்நிலையங்களில் பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்து வந்தனர். இதன் அடிப்படையில் செல்போன்கள் காணாமல்போன புகார்கள் குறித்து எஸ்.பி.செந்தில்குமார் விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு  உத்தரவிட்டார். அதன்படி எஸ்.பி. தனிப்பிரிவின் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், தலைமை காவலர் குபேந்திரன், காவலர் குமார் ஆகியோர் சைபர் கிரைம் போலீசார்  உதவியுடன்  20 நாள்களில் சுமார்  6 லட்சம் மதிப்புள்ள 60 ஆன்ட்ராய்டு செல்போன்களை கண்டுபிடித்தனர் அந்த செல்போன்களை அதன்  உரிமையாளர்களிடம் எஸ்.பி.செந்தில்குமார் வழங்கினார்.

இந்த செல்போன்களின் உரிமையாளர்களில் பெரும்பாலானவர்கள் சென்னை, விழுப்புரம், திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். மேலும், இதுகுறித்து  தனிப்பிரிவு போலீஸார் கூறும்போது, ``திருடப்பட்ட செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மற்றும் செல்போன் நம்பர்கள் மூலம் அவை இருக்கும் இடத்தைக் கண்டறிந்து நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று செல்போன்களை பறிமுதல் செய்தோம். இதில் திருடப்பட்ட ஒரு செல்போன் கர்நாடக மாநிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் கர்நாடக போலீஸாருக்குத் தகவல் கொடுத்தோம். அவர்கள் அந்த செல்போனை  மீட்டு தஞ்சைக்கு பார்சலில் அனுப்பிவைத்தனர். 

தஞ்சை போலீஸார்

இவ்வாறு பறிமுதல் செய்யப்படும்போது அதனை வைத்திருப்பவர்கள் அந்த செல்போன்களை பழைய செல்போன் கடைகளில் வாங்கியதாகவே தெரிவிக்கின்றனர். எனவே, பொதுமக்கள் பழைய செல்போன்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு வாங்கும்பட்சத்தில் அதன் உரிமையாளர் யார் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். பெண்கள் உட்பட அனைவரும் ஆள்நடமாட்டம் இல்லாத இடங்களில் செல்போனில் பேசிக்கொண்டு செல்லக்கூடாது. அப்படி செய்வதன் மூலம் செல்போன் திருடு போகாமல் பாதுகாக்கலாம். செல்போன் திருடப்பட்டுவிட்டது என புகார் அளிப்பவர்கள், `அனைத்து முக்கிய ஆவணங்கள் எல்லாமே செல்லில்தான் இருந்தது. எனவே, அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என கூறுகிறார்கள். முக்கிய தகவல்களை செல்போனில் வைத்து கொள்ள கூடாது என்றனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க