வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:00:00 (29/12/2018)

`ஆடு, மாடு குடிக்கத்தான் தண்ணீர் கேட்கிறோம்!’ - சிவகங்கை ஆட்சியரிடம் முறையிட்ட விவசாயிகள்

சிவகங்கையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் சேகர் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, கூட்டுறவு இணைப்பதிவாளர்  ஆரோக்கிய சுகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விவசாயிகள் குறைதீர்க் கூட்டம்

இதில், விரகனூர் மதகு அணையிலிருந்து பார்த்திபனூர் மதகுக்குட்பட்ட 2வது ரீச்சில் உள்ள 87 கண்மாய்கள் மூலம் 20 ஆயிரம் ஏக்கரில் நெல் விவசாயம் நடந்துள்ளது. இந்த நெல் முழுமையாக விளைச்சல் எடுப்பதற்கு  வைகை அணையில் பங்கீடு நீர் 1200 மில்லியன் கன அடி உள்ள நிலையில், மானாமதுரை பகுதிக்கு  20 ஆயிரம் ஏக்கர் நெற்பயிரை காப்பாற்றிட  உடனடியாக வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க  வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல், 2017-18ம் ஆண்டுக்குரிய பயிர் இழப்பீட்டுத்தொகை வழங்குவதில் ஒவ்வொரு கிராமத்திற்கு பாரபட்சம்காட்டாமல் ஒரேமாதிரி இழப்பீட்டுத் தொகை  வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகளிடமிருந்து அந்த இழப்பீட்டுத்தொகையில் விவசாயிகளின் பழைய கடன் தொகையை பிடித்தம் செய்யக்கூடாது எனவும் கோரிக்கை விடுத்தனர்.

திருப்பாச்சேத்தி பகுதியில் கிணற்றுப் பாசனம் மூலம் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டிலும் கஷ்டப்பட்டு நெல் விளையச் செய்துள்ளோம். ஆனால் எங்களிடம் வியாபாரிகள் அடிமாட்டு விலைக்கு கேட்கின்றனர். ரூ.850தான் தரமுடியும் என கேட்கின்றனர். எனவே திருப்பாச்சேத்தி பகுதியில் அரசு நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும். கிருதுமால் நதி பாசனத்திற்குட்பட்ட சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் உள்ள 16 கண்மாய்கள் பல ஆண்டாக  வறண்டு கிடக்கின்றன. ஆடு, மாடு குடிப்பதற்குத்தான் தண்ணீர் கேட்கிறோம். அதற்காக விரகனூர் மதகிலிருந்து திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க