வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (29/12/2018)

கடைசி தொடர்பு:10:30 (29/12/2018)

`இது ஸ்டன்ட் பண்ற இடமில்லை!’ - விவசாயிகள் கூட்டத்தில் கடுப்பான கலெக்டர்

கலெக்டர்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் கதிரவன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஈரோடு கலெக்டராக கதிரவன் பதவியேற்று கலந்துகொண்ட முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டமே, விவசாயிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ‘விவசாயிகள் தங்களுடைய குறைகளைச் சொல்ல, கலெக்டர் நேரம் கொடுக்க வேண்டும்’ என விவசாயிகள் நேரடியாகவே அதிருப்தி தெரிவித்தனர்.

இறந்துபோன விவசாயி ஒருவருக்கு, விவசாயக் கூட்டத்தின்போது அஞ்சலி செலுத்த வேண்டுமென விவசாயி ஒருவர் கோரிக்கை வைக்க, ‘இது அஞ்சலி செலுத்துவதற்கான இடமில்லை. வெளியே போய் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அஞ்சலி செலுத்திக் கொள்ளுங்கள்’ என அதிரடித்தார். விவசாயிகள் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகளையும் அவ்வப்போது ஒரு பிடி பிடித்து வந்தார். இதற்கிடையே விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென கையில் தோல் சாலைக் கழிவுகளை பாட்டிலில் ஏந்தியபடி, பொதுமக்கள் ஒருசிலர் கலெக்டரை நெருங்கினர்.

விவசாயிகள்

இதைப் பார்த்துக் கடுப்பான கலெக்டர் கதிரவன், ‘ஏங்க கூட்டம் அமைதியா நடந்துக்கிட்டு இருக்கு. விவசாயிகள் பேசிக்கிட்டு இருக்காங்க. நீங்க பாட்டுக்கு நடுவுல வந்து இடைஞ்சல் பண்றீங்க. கையில என்ன வச்சிருக்கீங்க. தேவையில்லாத ஸ்டன்ட் பண்ணாதீங்க. இது ஸ்டன்ட் பண்றதுக்கான இடமில்லை. போய் ஓரமா உட்காருங்க. கடைசியா பார்த்துக்கலாம்’ என கடுப்படித்தார்.

கூட்டம் முடிந்ததும் கலெக்டரைச் சந்தித்தவர்கள், ‘நரிப்பள்ளம் பகுதியில் விதிமுறைக்கு மாறாகச் செயல்பட்ட தோல் ஆலைகளைக் கடந்த ஒரு வருடங்களுக்கு முன் சீல் வைத்தார்கள். இதற்கிடையே மறுபடியும் அந்த ஆலைகள் இயங்க, மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் அனுமதியளித்திருக்கின்றனர். நள்ளிரவில் தோல் ஆலைக் கழிவுகளை பூமிக்குள்ளும், ஓடையிலும் முறைகேடாகத் திறந்துவிடுகின்றனர். இதனால், எங்கள் பகுதியில் குடிநீர் கடுமையாக மாசடைந்திருக்கிறது. மேலும், சுவாசிக்க முடியாத அளவுக்குக் காற்றில் துர்நாற்றம் வீசுகிறது. மக்களுக்கு கேடு விளைவிக்கும் அந்த ஆலைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என முறையிட்டனர்.

அதற்குப் பதிலளித்த கலெக்டர் கதிரவன், ‘தோல், சாய ஆலைகளை ரகசியமாக ஆய்வு செய்யச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறேன். ஏதேனும் முறைகேடுகள் இருப்பதாகத் தெரியவந்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.