திடீரென சாலையை கடந்த டிராக்டர்... கவிழ்ந்த டேங்கர் லாரி, ஆம்னி பஸ்... 34 பயணிகள் தப்பிய அதிசயம் | 34 persons are injured Tanker lorry crash with Omni bus in Kovilpatti

வெளியிடப்பட்ட நேரம்: 11:00 (29/12/2018)

கடைசி தொடர்பு:11:00 (29/12/2018)

திடீரென சாலையை கடந்த டிராக்டர்... கவிழ்ந்த டேங்கர் லாரி, ஆம்னி பஸ்... 34 பயணிகள் தப்பிய அதிசயம்

கோவில்பட்டி டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் மீது டேங்கர் லாரி மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 34 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு கோவில்பட்டி, சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து

நெல்லையிலிருந்து விருதுநகர் நோக்கி இன்று அதிகாலையில் எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி சென்றுகொண்டிருந்தது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டு மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டியிலிருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள தனியார் மில் அருகில் வந்துகொண்டிருக்கும்போது, திடீரென எதிர்பாராத விதமாக ஒரு டிராக்டர் சாலையைக் கடக்க முயன்றது. டிராக்டரின் மீது மோதி விடக்கூடாது என்பதற்காக, டிரைவர் டேங்கர் லாரியைத் திருப்பியுள்ளார்.

விபத்து

அப்போது, எதிர்ப்பகுதியில் கோவையிலிருந்து உடன்குடிக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரி மற்றும் ஆம்னி பஸ் இரண்டும் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆம்னி பஸ்ஸில் வந்த 33 பயணிகள் மற்றும் டேங்கர் லாரியின் டிரைவர் உட்பட 34 பேர் காயம் அடைந்தனர். இதில், பலத்த காயம் அடைந்த 4 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் டேங்கர் லாரி மற்றும் ஆம்னி பஸ்ஸின் முன்பகுதி முழுமையாக சேதம் அடைந்துள்ளது. இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுக்கா போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி டு மதுரை  இடையிலான தேசிய நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கடந்து செல்வதற்காக கிராஸிங் உள்ளது.

விபத்து

சாலையின் ஒருபுறத்திலிருந்து மறுபுறத்துக்கு கடந்து செல்லும் வாகனங்களின் டிரைவர்கள் சில நேரங்களில் சாலையில் வரும் வாகனங்களைக் கவனிப்பதே இல்லை. சாலையைக் கடந்து செல்ல வேண்டும் என்பதற்காக அவசரகதியில் கடக்க முயல்வதும், அலட்சியப் போக்கும்தான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணம் என அப்பகுதியினர் குற்றம்சாட்டி உள்ளனர். அதிகாலை நேரத்திலேயே நடந்த இவ்விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க