வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (29/12/2018)

கடைசி தொடர்பு:14:42 (29/12/2018)

`ஆளுநர் மாளிகை விசாரித்தது; கீதாலட்சுமி மீது எப்.ஐ.ஆர் பதிவாகும்!- அறப்போர் இயக்கம் நம்பிக்கை

கீதாலட்சுமி துணைவேந்தர்

மைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் எம்.பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், நடிகர் சரத்குமார், டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் கடந்த  2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தச் சோதனையில் ஏராளமான ஆவணங்கள் மற்றும் கோடிக்கணக்கான பணத்தைப் பறிமுதல் செய்திருந்தனர். இச்சோதனை தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

அதன் பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், கீதாலட்சுமி ஆகியோரை வருமான வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது சில முக்கியத் தகவல் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தன. குறிப்பாகத் துணைவேந்தராக இருக்கும் கீதாலட்சுமி மீது அப்போது ஊழல் குற்றச்சாட்டுகள் குவிந்தன. இந்த நிலையில், துணைவேந்தராக இருந்த கீதாலட்சுமியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. தற்போது, அவர் மீதான புகார் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் மாளிகை தயாராகி வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

விஜய பாஸ்கர்

கீதாலட்சுமி மீது புகார் கொடுத்திருந்த அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்டேசனிடம் பேசியபோது, ``ஏப்ரல் மாதம் 2017-ல் அப்போதைய ஆளுநரிடம் புகார் மனு அளித்திருந்தோம். அந்தப் புகாரில் துணைவேந்தராக இருக்கக்கூடியவர்கள் அரசியல் ரீதியாக இயங்கக்கூடாது. ஆனால், அந்த விதிகளை மீறி அவர் சசிகலாவை நேரில் சென்று பார்த்துள்ளார். அதுமட்டுமன்றி மற்ற துணைவேந்தர்களையும் சந்திக்க வைத்தார். அரசின் மிக முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள் இவ்வாறு செய்வது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான செயல். மேலும் ஆர்.கே.நகர் தேர்தலின்போது வருமானவரித்துறை நடத்திய சோதனையில், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் துணைவேந்தர் கீதாலட்சுமி வீட்டில் 5 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்டேசன்

வருமானவரித்துறை அறிக்கையை வைத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அறநெறி மற்றும் நேர்மையைப்  பின்பற்றுபவர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக இருக்க முடியும். ஆனால் கீதாலட்சுமி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்திருந்தோம். அந்தப் புகார் மனு கிணற்றில் போட்ட கல்லாக இருந்த நிலையில், தற்போது அந்த மனு உயிர் பெற்றுள்ளது. அந்தப் புகார் குறித்து விசாரிக்க ஆளுநர் மாளிகையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அங்கு நடந்த விசாரணையில் 'நீங்கள் கொடுத்த புகாரின்மீது உறுதியாக இருக்கிறீர்களா' என்று கேட்டார்கள். அதற்கு, `உறுதியாக இருக்கிறேன்' என்று பதில்கொடுத்தேன். இதனிடையே, நேற்றுடன் கீதாலட்சுமி ஓய்வுபெற்றார். இந்த நிலையில் நடைபெற்ற விசாரணையின் கோணத்தைப் பார்க்கும்போது அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது" என்றார்.