ஸ்டாலின் கவனத்துக்கு! - மோடி டூர் குறித்து தமிழிசை விளக்கம் | Tamilisai Soundararajan criticize stalin

வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (29/12/2018)

கடைசி தொடர்பு:12:40 (29/12/2018)

ஸ்டாலின் கவனத்துக்கு! - மோடி டூர் குறித்து தமிழிசை விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணத்தில்தான் அதிகம் கவனம் செலுத்துகிறார் என்றும் இந்திய மக்களின் பிரச்னைகளை அவர் கண்டுகொள்வதில்லை என இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் குற்றம்சாட்டி வருகின்றன. அதே கருத்தையே தமிழக தி.மு.கவும் தெரிவித்து வருகிறது. 

மோடி

இதற்கிடையில், மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்காக கடந்த நான்கு வருடங்களில்  ரூ.2,021 கோடி செலவாகியுள்ளதாகவும் அதனால் இந்தியாவில் வெளிநாடுகளின் நேரடி முதலீடு 43,478 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழிசை

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் விளக்கமளித்துள்ளார். முன்னதாக ஒருவர் ட்விட்டரில், ‘கடந்த 20 ஆண்டுகளில் முதல்முறையாக சீனாவைவிட இந்தியாவில் வெளிநாடுகளின் நேரடி முதலீடு அதிகரித்துள்ளது. 2018-ம் ஆண்டின் படி சீனாவில் 32 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதுவே, இந்தியாவில் 38 டாலர் பில்லியன் முதலீடு செய்யப்பட்டுள்ளது’ எனப் பதிவிட்டிருந்தார். 

ஸ்டாலின்

இதை ரீ ட்விட் செய்துள்ள தமிழிசை, ``மோடியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். உங்கள் கண்களை நன்றாகத் திறந்து பாருங்கள். ஏன் வெளிநாடு போனார், போனார்? எனத் திரும்ப திரும்பக் கேட்ட தி.மு.க பார்வைக்கு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாள்களாகவே தமிழிசைக்கும், ஸ்டாலினும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நிலவி வருகிறது. இந்த நிலையில், தற்போது தமிழிசையின் அடுத்த கருத்து தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.