வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (29/12/2018)

கடைசி தொடர்பு:12:50 (29/12/2018)

மீண்டும் `கறுப்பு எம்.ஜி.ஆர்' வாக்குகள்! - கூட்டணி வியூகத்தில் குழம்பும் எடப்பாடி பழனிசாமி

` நாம் கூட்டணி வைத்தால், அந்தக் கூட்டணிக்கு எதிராக சாதி, மத அடிப்படையில் அவர் அரசியலை நடத்துவார். இதனால் அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் கூட்டணிக்குக் கட்சிக்குப் போகாமல் தினகரன் பக்கம் சென்றுவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது.

மீண்டும் `கறுப்பு எம்.ஜி.ஆர்' வாக்குகள்! - கூட்டணி வியூகத்தில் குழம்பும் எடப்பாடி பழனிசாமி

தினகரனின் அடுத்தடுத்த வியூகத்தால் திணறி வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. ` தனித்துப் போட்டி என அறிவித்துவிட்டது அ.ம.மு.க. நாம் கூட்டணி வைத்துப் போட்டியிட்டால், அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் அவர் பக்கம் போய்விடக் கூடாது' என நிர்வாகிகளிடம் அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. 

எடப்பாடி பழனிசாமி

`நாடாளுமன்றத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி சேருவார்கள்?' என்ற வாதம், அரசியல் மட்டத்தில் எழுந்துள்ளது. `டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக அமைச்சர்கள் தங்கமணியும் வேலுமணியும் சந்தித்ததும் கூட்டணி தொடர்பாகத்தான்' என்ற தகவல் வெளியானது. ` நாங்கள் கூட்டணி குறித்துப் பேசவில்லை. தேர்தல் நேரத்தில் யாருடன் கூட்டணி என்பதை முதல்வரும் துணை முதல்வரும் உறுதி செய்வார்கள். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் தமிழக பிரச்னைகளைப் பற்றிப் பேசுவதற்காக நிர்மலா சீதாராமனை சந்தித்தோம்' எனப் பேட்டி அளித்தார் அமைச்சர் தங்கமணி. அதேநேரம், கன்னியாகுமரியில் பேட்டியளித்த அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், ` 2014-ம் ஆண்டு தமிழக நலனுக்காக ஜெயலலிதா எப்படி தனித்துப் போட்டியிட்டாரோ, அதே வழியில் அ.ம.மு.க-வும் போட்டியிடும். பிரதமரைத் தேர்வு செய்யும் சக்தியாக அ.ம.மு.க-வைத் தமிழக மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்' என நம்பிக்கையோடு பேசினார். இதன் தொடர்ச்சியாகப் பேசிய தம்பிதுரையும், ` 2014 , 2016 ஆண்டுகளில் அ.தி.மு.க-வை தனித்துதான் தேர்தலை சந்திக்கவைத்தார் ஜெயலலிதா. அவர் வழியை நாங்களும் பின்பற்றிவருகிறோம்' என்றார். 

ஓ.பன்னீர்செல்வம்

` அ.தி.மு.க-வின் தேர்தல் நிலைப்பாடுதான் என்ன?' என்ற கேள்வியை அ.தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். `` 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடலாமா...அல்லது கூட்டணி அமைக்கலாமா என இருவேறு மனநிலையில் கட்சித் தலைமை உள்ளது. `தேர்தலுக்குப் பிறகு பிரச்னைகளின் அடிப்படையில் பா.ஜ.க-வுக்கு ஆதரவு தருவோம்' என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் நிலைப்பாடாக இருக்கின்றது. ` நாடாளுமன்றத் தேர்தலை இரட்டை இலை மற்றும் அம்மா சென்டிமெண்ட் ஆகியவற்றை முன்வைத்து சந்திப்போம். இதில், கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் கொடுத்தால் அந்தந்த தொகுதியில் உள்ள அ.தி.மு.க மற்றும் கிறிஸ்துவ, முஸ்லிம், அட்டவணைப் பிரிவு வாக்குகளை தினகரன் அள்ளிக் கொண்டு போய்விடுவாரோ?' என எடப்பாடி பழனிசாமி யோசிக்கிறார்.

தினகரன்

கொங்கு மண்டலத்திலேயே எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மாநாடு நடத்தியது, சில சமூகங்களை ஒருங்கிணைப்பது என தினகரன் முன்னெடுக்கும் அரசியலை அவர் கவனித்து வருகிறார். ` நாம் கூட்டணி வைத்தால், அந்தக் கூட்டணிக்கு எதிராக சாதி, மத அடிப்படையில் அவர் அரசியலை நடத்துவார். இதனால் அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் கூட்டணிக்குக் கட்சிக்குப் போகாமல் தினகரன் பக்கம் சென்றுவிடுவதற்கான வாய்ப்பு உள்ளது. இப்படியொரு சூழல் ஏற்பட்டுவிடக் கூடாது' எனக் கட்சியின் சீனியர்களும் கவலை தெரிவிக்கின்றனர். 

எடப்பாடி பழனிசாமி

இதற்கு முக்கிய உதாரணமாக அவர்கள் பார்ப்பது, அம்மா உயிருடன் இருக்கும்போதே 8 சதவிகித வாக்குகளைப் பெற்றார் விஜயகாந்த். நாடாளுமன்ற தேர்தலில் அவர் 10 சதவீத வாக்குகளை எடுக்கக் காரணம், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வாக்குகள் எல்லாம் கூட்டணிக் கட்சிகளுக்குப் போகாமல் `கறுப்பு எம்.ஜி.ஆர்' என்ற பிரசாரத்தால் தே.மு.தி.க-வுக்குச் சென்றுவிட்டதுதான். அதனால்தான், விஜயகாந்தால் தருமபுரியில் ஒன்றரை லட்சம் வாக்குகளையும் கள்ளக்குறிச்சியில் ஒன்றே கால் லட்சம் வாக்குகளையும் எடுக்க முடிந்தது. ` கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்கக் கூடிய இடங்களில் தினகரன் அதிக வாக்குகளை எடுத்துவிடக் கூடாது. ஸ்டாலினையும் எதிர்கொள்ள வேண்டும். தினகரன் பெறக் கூடிய வாக்கு சதவீதத்தையும் குறைக்க வேண்டும்' என்ற முடிவை எடுத்திருக்கிறார் முதல்வர்" என்றார் விரிவாக. 

விஜயகாந்த்

அதேசமயம், `` அ.தி.மு.க கூட்டணி தொடர்பாக பா.ம.க-வுக்குள்ளேயே இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன" என விவரித்த பா.ம.க நிர்வாகி ஒருவர், `` அ.தி.மு.க தரப்பில் பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரவில்லை. கூட்டணி பற்றிப் பேசும் சில பா.ம.க நிர்வாகிகளும், ` தி.மு.க, அ.தி.மு.க-வே ஆகாது. இவ்வளவு நாள் எதிர்த்துவிட்டு திடீரென எப்படிக் கூட்டணி வைத்துக் கொள்ள முடியும். மீண்டும் தனித்து நின்றால்தான் சரியாக வரும். எடப்பாடி பழனிசாமியை வன்னிய சமூக மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. இத்தனை நாள்களாக இவரெல்லாம் முதல்வரா என எடப்பாடியைக் கேட்டோம். ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து அறிக்கை மேல் அறிக்கை கொடுத்துவிட்டு அவர்களோடு கூட்டணி சேர்ந்தால் நம்முடைய வாக்குகளே நமக்கு வந்து சேராது' என்கின்றனர். ஆனால், ` அ.தி.மு.க கூட்டணியில் நின்றால் எளிதாக வெற்றி பெற்றுவிட முடியும்' என கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் கணக்கு போடுகின்றனர். வரும் பொங்கலுக்குள் கூட்டணி குறித்த பேச்சுக்களும் முடிவுக்கு வந்துவிடும்" என்கின்றனர்.