`நள்ளிரவில் செல்போனை வைப்பேன்; பகலில் பார்ப்பேன்!'- நர்ஸ்களை ரகசிய வீடியோ எடுத்த சூப்பர்வைஸர் வாக்குமூலம் | Hidden cellphone found in dressing room at chennai hospital ; supervisor caught by police

வெளியிடப்பட்ட நேரம்: 12:59 (29/12/2018)

கடைசி தொடர்பு:12:59 (29/12/2018)

`நள்ளிரவில் செல்போனை வைப்பேன்; பகலில் பார்ப்பேன்!'- நர்ஸ்களை ரகசிய வீடியோ எடுத்த சூப்பர்வைஸர் வாக்குமூலம்

சென்னையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனையில் நர்ஸ்கள், பெண்கள் உடைமாற்றும் அறைகளில் செல்போனை வைத்து வீடியோ எடுத்த துப்பரவுப் பணி சூப்பர்வைஸரை போலீஸார் கைதுசெய்துள்ளனர்.

நர்ஸ் மற்றும் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த சிவபிரகாஷ்

சென்னை சைதாப்பேட்டை, அண்ணாசாலையில் சிறுநீரக கோளாறு தொடர்பான சிகிச்சைக்கு பிரபலமான தனியார் மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனையின் மேலாளராக ரேவதி என்பவர் உள்ளார். சம்பவத்தன்று அவர், மருத்துவமனைக்குள் நடந்துச் சென்றபோது துப்பரவுப் பணியாளர் ஒருவர், தன்னுடைய செல்போனில் ஆபாசப் படங்கள், வீடியோக்களை மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அதைக் கவனித்த ரேவதி, அதிர்ச்சியடைந்தார். அந்தத் துப்பரவுப் பணியாளரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த செல்போனில் நர்ஸ்களின் வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தன. 

இதையடுத்து துப்பரவுப் பணியாளரிடம் விசாரித்தபோது, துப்பரவுப் பணி சூப்பர்வைஸர் சிவபிரகாஷ் என்பவரிடம் மருத்துவமனையில் பெண்கள் உடைமாற்றும் வீடியோக்கள் அதிகம் உள்ளன என்று உளறியுள்ளார். இதனால் சிவபிரகாஷிடம் விசாரணை நடத்தப்பட்டது. உடனடியாக அவரின் செல்போனையும் ஆய்வு செய்தனர். அதில் பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் வீடியோக்கள் இருந்தன. 

தொடர்ந்து, சைதாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீஸார் மருத்துவமனைக்குச் சென்றனர். சிவபிரகாஷை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்தபோது, பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் அறையில் தன்னுடைய செல்போனை ஆள்இல்லாத நேரத்தில் வைப்பேன். பெரும்பாலும் எனக்கு இரவுப் பணி என்பதால் செல்போனை நள்ளிரவில் வைப்பேன். மறுநாள் அதை எடுப்பேன். அதில் நர்ஸ்கள், பெண்கள் உடைமாற்றும் காட்சிகள், அவர்கள் பேசும் ஆடியோக்கள் பதிவாகியிருக்கும். அதை பகலில் பார்ப்பேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து சிவபிரகாஷை போலீஸார் கைது செய்தனர். அவரின் செல்போனையும் பறிமுதல் செய்தனர். அவரின் செல்போனை ஆய்வு செய்தால் இன்னும் சில வீடியோக்கள் கிடைக்கும் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர். 

செல்போன் மூலம் நர்ஸ் உடைமாற்றுவதை படம் பிடிப்பு

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையில் துப்பரவுப் பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தில், பட்டதாரியான சிவபிரகாஷ் சூப்பர்வைஸராக பணியாற்றியுள்ளார். இவர், மருத்துவமனையில் உள்ள எல்லா அறைகளுக்கும் செல்வார். இந்தச் சமயத்தில்தான் பெண்கள், நர்ஸ்கள் உடைமாற்றும் அறைக்கு ஒருநாள் சென்றபோது நர்ஸ் ஒருவர் உடைமாற்றியதைப் பார்த்துள்ளார். இதனால் அவருக்கு சபலம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தன்னுடைய செல்போனை உடைமாற்றும் அறையில் மறைத்து வைத்துவிட்டு வெளியில் வந்துள்ளார். அதில் நர்ஸ் ஒருவர் உடைமாற்றிய காட்சிகள் வீடியோவாக பதிவானது. அந்த வீடியோவை சம்பந்தப்பட்ட நர்ஸிடம் சிவபிரகாஷ் காட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த நர்ஸ், தன்னுடைய கணவரிடம் விவரத்தைச் சொல்லி கதறி அழுதுள்ளார். அதன்பிறகு சம்பந்தப்பட்ட நர்ஸின் கணவரின் மிரட்டலுக்குப் பயந்த சிவபிரகாஷ், அவர்களின் கண் முன்னால் வீடியோவை அழித்துள்ளார். இந்தச் சம்பவத்துக்குப்பிறகும் திருந்தாத சிவபிரகாஷ், மீண்டும் உடைமாற்றும் அறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோவை எடுத்து அதை ரகசியமாக பார்த்துவந்துள்ளார். சிவபிரகாஷிக்கு திருமணமாகவில்லை. இந்தச் சமயத்தில்தான் இன்னொரு துப்பரவுப் பணியாளர் ஒருவரால் சிவபிரகாஷ் எங்களிடம் சிக்கியுள்ளார். பெண்கள், நர்ஸ்களின் வீடியோவை காட்டி யாரையும் மிரட்டவும் பணம் பறிக்கவும் இல்லை என்று விசாரணையின்போது எங்களிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதுதொடர்பான விசாரணை நடந்துவருகிறது" என்றனர். 

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``சிவபிரகாஷ் குறித்த விவரங்களைச் சேகரித்துவருகிறோம். அவரின் செல்போனை முழுமையாக ஆய்வு செய்தால்தான் எத்தனை வீடியோக்கள் உள்ளன என்பதைச் சொல்ல முடியும். மேலும், சிவபிரகாஷின் செல்போன் வீடியோக்கள் உள்ள பெண்களுக்கும் நர்ஸ்களுக்கும் இந்தத் தகவல் தெரியாது. இதனால் சம்பந்தப்பட்ட பெண்கள், நர்ஸ்களின் எதிர்கால நலன்கருதி வீடியோக்களை அழிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சிவபிரகாஷ் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க தேவையான ஆதாரங்களும் சாட்சிகளும் எங்களிடம் சிக்கியுள்ளன. சிவபிரகாஷிடம் விசாரித்தபோது என்னுடைய அற்ப சந்தோஷத்துக்காக இப்படி செய்துவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சினார்" என்றார்.  

சென்னை ஆதம்பாக்கத்தில் மகளிர் விடுதியில் ரகசிய கேமராக்களை வைத்து பெண்களை வீடியோ எடுத்த பரபரப்பு அடங்குவதற்குள் தனியார் மருத்துவமனையில் செல்போன் வீடியோவில் நர்ஸ்கள், பெண்கள் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.