``ரூ.2,000 கொடுங்க போதும் சார்..!’’ - எஸ்.ஐ-யிடம் தானாக வந்து சிக்கிய பாலியல் கும்பல்! | Accused barged with police SI in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (29/12/2018)

கடைசி தொடர்பு:15:29 (29/12/2018)

``ரூ.2,000 கொடுங்க போதும் சார்..!’’ - எஸ்.ஐ-யிடம் தானாக வந்து சிக்கிய பாலியல் கும்பல்!

திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம்

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் `நீங்கள் விரும்பினால் 2,000 ரூபாய்க்கு ஜாலியாக இருக்கலாம்' என்று போலீஸ் எஸ்.ஐ-யிடம் பாலியல் புரோக்கர் பேரம் பேசி சிக்கியுள்ளார். 

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாகப் போலீஸ் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதுதொடர்பாக விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. திருவல்லிக்கேணி எல்லீஸ் ரோட்டில் எஸ்.ஐ கவியரசு, போலீஸ் சீருடையில்லாமல் சாதாரண உடையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு வந்த முதியவர் ஒருவர், `நீங்கள் நீண்ட நேரம் இங்கு நின்றுகொண்டு இவ்வழியாகச் செல்லும் பெண்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் விரும்பினால் 2,000 ரூபாய் கொடுத்துவிட்டு ஜாலியாக இருக்கலாம்' என்று கூறியுள்ளார். அதைக்கேட்டு எஸ்.ஐ கவியரசு அதிர்ச்சியடைந்தார். முதியவர் மற்றும் அவரின் கூட்டாளிகளைப் பிடிக்க திட்டமிட்டார். முதியவரிடம், `பெண்ணைப் பார்த்துவிட்டு பணம் தருகிறேன்’ என்று எஸ்.ஐ கவியரசு கூறினார். 

இதனால், கவியரசை அழைத்துக்கொண்டு முதியவர், சின்னதம்பி தெருவில் உள்ள குறிப்பிட்ட ஒரு விடுதிக்குச் சென்றார். அங்கு விடுதியின் உரிமையாளர் ஸ்ரீகாந்த்பாபுவிடம் கவியரசை புரோக்கரான முதியவர் அறிமுகப்படுத்தியுள்ளார். அப்போது அங்கு காத்திருந்த ஒருவர், தானும் கஸ்டமர்தான் என்றும் எந்தவித பிரச்னையும் இல்லை என்றும் கவியரசுவிடம் கூறியுள்ளார். இதையடுத்து 2,000 ரூபாய்க்குக் குறைவான பணம் உள்ளது. எனவே, ஏ.டி.எம்-மில் பணத்தை எடுத்து வருகிறேன் என்று கூறிய கவியரசு அங்கிருந்து புறப்பட்டார். 

 திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம்

இந்தத் தகவலை இன்ஸ்பெக்டர் மோகன்தாஸிடம் கூறியதும் போலீஸ் டீம் அந்த விடுதிக்குச் சென்றது. அப்போது புரோக்கர், விடுதியின் உரிமையாளர் ஸ்ரீகாந்த் பாபு, கஸ்டமர் மற்றும் பெண் ஒருவர் ஆகியோரை மடக்கிப் பிடித்தனர். பெண்ணை அரசு காப்பகத்தில் சேர்த்த போலீஸார், புரோக்கர் தேவகுரு, ஸ்ரீகாந்த்பாபு ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``பாலியல் புரோக்கர் தேவகுருவுக்கு வயது 63. இவர், கடலூரைச் சேர்ந்தவர். விடுதிக்கு கஸ்டமராக வந்தவர், மத்திய அரசு ஊழியர். கிழக்கு தாம்பரம் சேலையூரைச் சேர்ந்த இவர், எழும்பூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றுகிறார். தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர்.