வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (29/12/2018)

கடைசி தொடர்பு:15:05 (29/12/2018)

``டாஸ்மாக்கில் காட்டிய அக்கறை ஸ்டெர்லைட்டில் காட்டவில்லை" - தமிழக அரசை விளாசும் அன்புமணி!

தமிழக அரசு மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளைத் திறப்பதற்கு காட்டிய அக்கறையை, ஸ்டெர்லைட், காவிரி போன்ற பிரச்னைகளில் காட்டவில்லை என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கோவையில் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாகச் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, இளைஞர் அணித் தலைவர் அன்புமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி, ``அத்திக்கடவு அவினாசி திட்டத்தை காளிங்கராயன் வாய்க்காலில் இருந்து மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்ல திட்டமிட்டிருக்கிறார்கள். இதில் சாத்தியக் கூறுகள் கேள்விக் குறியாக உள்ளன. எனவே, செலவு அதிகமானாலும் பரவாயில்லை என்று பழைய முறையில் அத்திக்கடவு அவினாசி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

பாண்டியாறு – புன்னம் புழா உள்ளிட்ட கொங்கு மண்டல திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். விளை நிலங்களில் உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிராக 13 மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாய நிலங்களை அழித்து வளர்ச்சித் தேவையில்லை. மத்திய அரசு, அணைகள் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வர இருக்கிறது. இதில், அணைகளின் நிர்வாகம் அந்தந்த மாநிலங்களுக்குச் சென்றுவிடும். இது தமிழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அதைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

அன்புமணி ராமதாஸ்

மேக்கே தாட்டூ அணை விவகாரத்தில், சட்டமன்றத்தைக் கூட்டி உடனடியாக அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மேலும், காவிரி டெல்டாவைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக, சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். இதற்கு ஜனாதிபதியிடம் கையெழுத்து வாங்க வேண்டும். அப்போதுதான், ஆபத்தான திட்டங்களில் இருந்து காவிரி டெல்டாவை நாம் பாதுகாக்க வேண்டும். கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் சரியாகச் சென்று சேரவில்லை.

என்.எல்.சி நிறுவனம் மூன்றாவது சுரங்கத்தை அமைக்க விவசாய நிலங்களைக் கையகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதை நாங்கள் கடுமையாகக் கண்டிக்கிறோம். என்.எல்.சி நிறுவனமே அங்கு வேண்டாம் என்றுதான் நாங்கள் சொல்கிறோம். சாத்தூர் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்டதில் அடிப்படையிலேயே தவறு நடந்திருக்கிறது. இதற்கு அமைச்சரும், அதிகாரிகளும்தான் காரணம். தமிழகத்தின் சுகாதாரத்துறை சரியாகச் செயல்படவில்லை. அடிப்படை பணியைக்கூட சரியாகச் செய்யவில்லை என்றால், இவர்கள் ஆட்சி செய்வதற்கே லாயக்கில்லை. எனவே, அமைச்சரும், அதிகாரிகளும் பதவி விலகவேண்டும்.

டாஸ்மாக் கடை மூடப்பட்டதற்கு எதிராக மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடிய தமிழக அரசு, ஸ்டெர்லைட், காவிரி, மேக்கே தாட்டூ போன்ற விவகாரங்களில் அதைப்போன்று வாதாட மறுக்கிறது” என்றார்.