வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (29/12/2018)

கடைசி தொடர்பு:16:40 (29/12/2018)

ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம்! - `சுகாதாரத்தில் முதலிடமா விருதுநகர்?’

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிர வைத்துள்ளது. அரசு ரத்த வங்கிகள் மீதும், அரசு மருத்துவமனையின் அலட்சியமும் மக்களை அச்சம் கொள்ள வைத்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட அப்பெண்ணும், ரத்தம் வழங்கிய அந்த வாலிபரும் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி விசாரிக்க பல்வேறு குழுக்களை ஏற்படுத்தியுள்ளது சுகாதாரத்துறை.

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டக் கலெக்டர் சிவஞானம் இன்றுதான் பாதிக்கப்பட்ட பெண்ணை பார்க்க வந்தார். அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி விசாரித்தார். வாடகை வீட்டில் குடியிருந்து வரும் அப்பெண்ணுக்கு இலவச வீட்டுமனை பட்டாவையும் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான பணி உத்தரவையும் மருத்துவமனையில் வைத்து வழங்கினார். 

முதலமைச்சரிடம் விருதைக்காட்டி வாழ்த்து பெற்ற விருதுநகர் கலெக்டர் சிவஞானம்
 

ஹெச்.ஐ.வி பாதித்த ரத்தம் வழங்கப்பட்ட பிரச்னை விருதுநகர் மாவட்டத்தில் வெளிக்கிளம்பி தமிழகத்தையே அதிர வைத்த நேரத்தில் கலெக்டர் சிவஞானம் மாவட்டத்தில் இல்லை. `மாற்றத்தின் வெற்றியாளர் -2018' மத்திய அரசின் விருதை வாங்க டெல்லி சென்றிருந்தார். நாட்டிலுள்ள மிகவும் பின்தங்கிய 115 மாவட்டங்களைத் தேர்வு செய்து அதை வளர்ச்சியான மாவட்டமாக்கும் திட்டத்தில் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகரும் கடந்த வருடம் தேர்வு செய்யப்பட்டன. இந்த இரு மாவட்டத்தையும் கண்காணிப்பவராக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நிதி ஆயோக் இந்த மாவட்டங்களை ஆய்வு செய்ததில் விருதுநகர் வளர்ச்சி அடைந்ததில் முதல் இடம் பிடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான விருதை பெறுவதற்காக 26-ம் தேதி டெல்லி சென்றார். வெங்கைய நாயுடுவிடம் விருதைப் பெற்றவர் 28-ம் தேதி சென்னை வந்து, முதலமைச்சரிடம் விருதைக்காட்டி வாழ்த்து பெற்றுவிட்டு இன்று காலை விருதுநகர் வந்தார். இது மக்கள் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சுகாதாரம், கல்வி, விவசாயம், அடிப்படைக் கட்டமைப்பு, ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, ஆகியவற்றில் முதலிடத்தில் இருப்பதாக விருதுநகர் மாவட்டத்தைத் தேர்வு செய்திருப்பதுதான் ஆச்சர்யமானது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க