`மருத்துவத்துறையினரைக் காப்பாற்றவே விசாரணைக் குழு!' - ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பு புகார் | Sattur pregnant woman issue - enquiry team trying to protect medical department

வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (29/12/2018)

கடைசி தொடர்பு:18:45 (29/12/2018)

`மருத்துவத்துறையினரைக் காப்பாற்றவே விசாரணைக் குழு!' - ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பு புகார்

``தவறுசெய்த மருத்துவத்துறையினரைக் காப்பாற்றுவதற்காகத்தான் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது'' என ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

 ஹெச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பினர்

விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கடந்த 3-ம் தேதி சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து பெறப்பட்ட ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் செலுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிவகாசி அரசு மருத்துவமனை ரத்தவங்கி மற்றும் நம்பிக்கை மைய ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக 5 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் விருதுநகர் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன், நிலைய மருத்துவ அலுவலர் திருமுருகானந்த், நம்பிக்கை மைய ஆலோசகர் முருகேசன், செவிலியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இந்த விசாரணைக் குழு அமைக்கப்பட்டதே தவறுசெய்த மருத்துவத்துறையினரைக் காப்பாற்றுவதற்காகத்தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராமபாண்டியன் கூறும்போது, ``கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது மிகவும் கண்டனத்துக்குரியது. ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தம் கொடுத்த இளைஞர் தாமாகவே முன்வந்து இந்தத் தகவலைக் கூறியுள்ளார். இல்லையெனில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவமே மறைக்கப்பட்டிருக்கும். எனவே, அந்த இளைஞரை அரசு பாராட்ட வேண்டும். அவருக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆலோசனை வழங்க வேண்டும். ஹெச்.ஐ.வி ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவில் மருத்துவர்கள் மட்டும்தான் உள்ளனர்.

ஹெச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராமபாண்டியன்

பாதிக்கப்பட்ட பெண்ணை சார்ந்தவர்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ, ஹெச்.ஐ.வி உள்ளோர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களோ இடம்பெறவில்லை. இதனால் விசாரணை முழுமையாக நடைபெற வாய்ப்பில்லை. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மருத்துவத்துறையைச் சேர்ந்தவர்களைப் காப்பாற்றவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை. மருத்துவத்துறையினர் கர்ப்பிணிப் பெண்ணின் கணவரையும் மிரட்டியுள்ளனர். 2006-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை ஹெச்.ஐ.வி பாதிப்பு குறைந்திருந்தது. ஆனால், தற்போது ஹெச்.ஐ.வி. குறித்த விழிப்புஉணர்வு குறைந்துள்ளது. அரசு விழிப்புஉணர்வு ஏற்படுத்தவில்லை. இதனால் ஹெச்.ஐ.வி பாதித்தோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

ஹெச்.ஐ.வி. உள்ளோர் கூட்டமைப்பின் மாநிலத் தலைவர் ராமபாண்டியன் மற்றும் நிர்வாகிகள்

தமிழ்நாடு முழுவதும் 1.4 லட்சம் பேருக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு உள்ளது. இதில் 2 சதவிகிதம் பேருக்கு எப்படி ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படுகிறது என்ற காரணமே தெரியவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் விருதுநகர் மாவட்டத்தில் ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், ஹெச்.ஐ.வி-யால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர். அதற்கான காரணம் என்ன என்ற விவரத்தை ஆட்சியர் கணக்கெடுக்க வேண்டும். ஆனால், அப்படிக் கணக்கெடுப்பு எதுவும் நடைபெறவில்லை. இதனால் ஹெச்.ஐ.வி நோயாளிகள் ஏன் உயிரிழக்கிறார்கள் என்ற காரணம் தெரிவதில்லை. கர்ப்பிணிப் பெண்ணுக்கு உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும். அவர் வயிற்றில் வளரும் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு ஏற்படாத வகையில் சிகிச்சையளிக்க வேண்டும்'' எனத் தெரிவித்தார்.