வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (29/12/2018)

கடைசி தொடர்பு:09:31 (31/12/2018)

``ஹரிணி கிடைச்சிடுவானுதான் கோயில்கோயிலா போறோம்!" - நம்பிக்கையில் பெற்றோர்கள்

ஐஸ்வர்யா காணாமல்போன அன்றைக்கே போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னோம். அவங்களும், 'பொண்ணு திரும்ப வந்துடும்'னு அலட்சியமா சொல்லி அனுப்பிடுறாங்க.

``ஹரிணி கிடைச்சிடுவானுதான் கோயில்கோயிலா போறோம்!

கொசுவலைக்குள் பெற்றோர்களுடன் உறங்கிக்கொண்டிருந்த சிறுமி ஹரிணி, காணாமல்போய் நூறு நாள்கள் உருண்டோடிவிட்டன. ஹரிணியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் இதுவரை எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. ஹரிணியின் தாய் காளியம்மாளின் உடல்நிலையில் சோர்வு இருந்தாலும், அவரின் நம்பிக்கை சற்றும் குறைவதாய் இல்லை. அவர்களின் தேடல் இன்றும் தொடர்கிறது!

ஹரிணி

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், மானமதி பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் ஆட்டோவில் ஊர்ஊராகச் சென்று பொம்மைகள், வளையல்கள் உள்ளிட்ட ஃபேன்சி பொருள்களை விற்றுப் பிழைப்பு நடத்தி வருபவர். 15.09.2018 தேதியன்று ஆட்டோவின் முன்விளக்கு பழுதடைந்ததால், மனைவி காளியம்மாள் மற்றும் தனது இரண்டு வயதுக் குழந்தை ஹரிணியுடன் அணைக்கட்டு காவல் நிலையம் அருகே  படுத்துறங்கினார். நள்ளிரவில் ஹரிணி காணாமல் போனதைத் தொடர்ந்து, அருகில் உள்ள காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் காவல் துறையினர் பல்வேறு இடங்களில் ஹரிணியைத் தேடிவந்தனர். குழந்தை காணாமல் போனதிலிருந்து காளியம்மாள் அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. அணைக்கட்டு காவல் நிலையத்தையே சுற்றிச்சுற்றி வந்தார். குடும்ப சகிதமாக வெங்கடேசனும் காவல் நிலையம் அருகிலேயே தங்கிவிட்டார். உறவினர்களும், தன்னார்வத் தொண்டு அமைப்பினரும் காளியம்மாளைத் தேற்றிவருகிறார்கள். நம்பிக்கை தளராமல், ஹரிணி கிடைக்க வேண்டி வெளியூர்களுக்குக் கோயில் கோயிலாகச் சென்று வருகிறார்கள், வெங்கடேசன் - காளியம்மாள் தம்பதியினர். காளியம்மாளின் பாசப் போராட்டத்தைக் கேள்விப்பட்டு பல்வேறு அமைப்புகளும் அவர்களுக்கு நிதிகொடுத்து உதவுகிறார்கள். ஹரிணிக்காகக் கோயில்கோயிலாகப் படியேறியே காளியம்மாளின் கால்கள் சோர்வடைந்துவிட்டன. அதேவேளையில் வயிற்றிலுள்ள குழந்தைக்காக அடிக்கடி மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சைபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.


வெங்கடேசன்-காளியம்மாள்

ஹரிணியின் தந்தை வெங்கடேசனிடம் பேசினோம். “காளியம்மாளுக்கு காய்ச்சலும், இருமலும் இருக்கிறது. இதனால் கண்டிகையில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகப் போனோம். அவர், கர்ப்பிணியாக இருப்பதால் ஊசி போடவில்லை. அதனால், அவருக்கு உடம்பு சரியாகவில்லை. உத்திரமேரூர் பக்கத்தில் இருக்கும் இரும்பேடு கிராமத்தில உள்ள பொன்னியம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறோம். இரண்டு நாள் இங்கே தங்கிவிட்டுக் கிளம்பிடுவோம். காளியம்மாளுக்கு அடுத்த மாதம் 29-ம் தேதி டெலிவரி ஆகும் என்று டாக்டர் தேதி கொடுத்திருக்கிறார். ஹரிணி எப்போது கிடைப்பாள் என்று காவல் துறையினரிடம் கேட்டால், சரியான பதில் சொல்வதில்லை. நாங்கள் நாடோடி இனம் என்பதால் அலட்சியமாகப் பதில் சொல்கிறார்கள். குழந்தையின் பிரிவால், நாங்கள் தொழிலுக்குக்கூடப் போவதில்லை. தொண்டு அமைப்புகள்தான் எங்களுக்கு நிதி கொடுத்து உதவுகிறார்கள். தற்போதுதான் சபரி மலைக்குச் சென்று வந்தேன். ஹரிணி கிடைத்துவிடுவாள் என்ற நம்பிக்கையில்தான் கோயில்கோயிலாகச் சென்று வேண்டி வருகிறோம்” என்றார்.
ஐஸ்வர்யா

இதுகுறித்து காவல் துறை வட்டாரத்தில் பேசினோம். “ஹரிணி பற்றி எந்தத் தகவலும் சரியாகக் கிடைக்கவில்லை. ஆனாலும் தேடும் பணியில் தீவிரமாக இருக்கிறோம். விரைவில் கண்டுபிடித்துவிடுவோம்” என்றார்கள். 

சங்கர்

ஹரிணியைப் போன்று பல்லாவரம் பகுதியில் காணாமல்போன ஐஸ்வர்யா என்ற பத்து வயது சிறுமியும் இதுவரை கிடைக்கவில்லை. பல்லாவரம் பகுதியில் பாசிமணி வியாபாரம் செய்பவர், சங்கர். பாசிமணி வியாபாரம் செய்வதுதான் இவர்களின் முக்கியத் தொழில். கடந்த 14.10.2018-ம் தேதி காலை பாசிமணி விற்கச் சென்ற இவரின் மகள், ஐஸ்வர்யா மாயமானார். மகள் காணாமல் போனது குறித்து சங்கர் அன்றே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஆனாலும் தாமதமாகத்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஹரிணியைத் தேடுவதற்கு காட்டிய அக்கறையில் பாதி அளவுகூட ஐஸ்வர்யாவைத் தேடுவதற்கு பல்லாவரம் காவல் துறையினர் தீவிரம் காட்டவில்லை. பவுஞ்சூர் கிராமத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாததால், ஹரிணியைத் தேடுவதில் சிக்கல் இருந்து வருகிறது. ஆனால் பல்லாவரம் பகுதியில் நிறைய இடங்களில் சி.சி.டி.வி கேமராக்கள் இருக்கின்றன. இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் ஐஸ்வர்யா கிடைக்காததால் அவரின் குடும்பத்தினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யாவின் தந்தை சங்கரிடம் பேசினோம். ``ஐஸ்வர்யா காணாமல்போன அன்றைக்கே போலீஸ் ஸ்டேஷன்ல சொன்னோம். அவங்களும், 'பொண்ணு திரும்ப வந்துடும்'னு அலட்சியமா சொல்லி அனுப்பிடுறாங்க. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, படப்பை, கிளாம்பூர்னு எங்க சாதிக்காரங்க இருக்கும் இடமெல்லாம் தேடினோம். அதுபோல ஆந்திராவிலும் எங்க சாதிக்காரங்க இருக்கும் பகுதிகளில் தேடினோம். தினந்தினம் ஊர்ஊரா அலையும் அளவுக்கு எங்ககிட்ட பணம் இல்லை. எவ்வளவு தேடியும் ஐஸ்வர்யா கிடைத்தபாடில்லை. குடும்பத்துல இருக்குறவங்களுக்கு உடம்பு சரியில்லாம ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் அலையுறோம். பணக் கஷ்டம் ஒரு பக்கம். மனக் கஷ்டம் இன்னொரு பக்கம்” என்றார் வேதனைப் படிந்த குரலில்.

காணாமல் போனது நாடோடிக் குழந்தைகள்தானே என அலட்சியமாய் இருக்கிறதோ, காவல் துறை?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்